சென்னைக்கு வந்தடைந்தது 850 டன் வெங்காயம் - ரூ.35-க்கு விற்பனை செய்ய நடவடிக்கை!

 

நாசிக்கில் இருந்து சரக்கு ரயில் மூலம் சென்னைக்கு 850 டன் வெங்காயம் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், விலை உயர்வைைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களுக்கு இவை அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்திலிருந்து 'காந்தா எக்ஸ்பிரஸ்' சிறப்புச் சரக்கு ரயில் மூலம் 848.50 டன் வெங்காயம் சென்னை தண்டையார்பேட்டை பணிமனைக்கு வந்து சேர்ந்தது.

பருவமழை குறைவால் விளைச்சல் பாதிக்கப்பட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெங்காய விலை கிலோ ரூ.50 முதல் ரூ.65 வரை விற்பனையாகி வரும் நிலையில், மத்திய அரசின் கையிருப்பிலிருந்து இந்தச் சலுகை விலைத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

ரயிலில் கொண்டுவரப்பட்ட இந்த வெங்காயம் 25 டன் கொள்ளளவு கொண்ட லாரிகள் மூலம் பிரிக்கப்பட்டு, தமிழ்நாட்டில் உள்ள 21 மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு அங்காடிகள் மற்றும் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், ஒரு கிலோ வெங்காயம் 35 ரூபாய் என்ற எளிய விலையில் தமிழக அரசால் விற்பனை செய்யப்படவுள்ளது.