11 வயது சிறுவன் ஓட்டிய கார் மோதி 9 புத்த துறவிகள் பலி; தாய்லாந்தில் பயங்கரம்! 

 

தாய்லாந்தின் வடகிழக்குப் பகுதியில் 11 வயது சிறுவன் ஒருவன் தனது குடும்பத்தினருக்குத் தெரியாமல் ஓட்டி வந்த பிக்கப் கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் புனிதப் பயணம் சென்று கொண்டிருந்த புத்த துறவிகள் குழுவினர் மீது மோதிய விபத்திற்குள்ளானதில் 9 துறவிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தத் துயரச் சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கிலிருந்து வடகிழக்கே சுமார் 600 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முக்தஹான் மாகாணத்தில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. முக்தஹான் மாகாணத்தைச் சேர்ந்த மொத்தம் 35 பவுத்த துறவிகள், அங்கிருந்து உபோன் ரட்சதானி மாகாணத்தை நோக்கிச் சுமார் 260 கி.மீ தூரத்திற்கான தங்களது ஆன்மீக நடைபயணத்தைத் தொடங்கியுள்ளனர்.

துறவிகள் குழு நடைபயணத்தைத் தொடங்கிச் சரியாக 30 நிமிடங்களே ஆன நிலையில், சாலையோரமாக அவர்கள் வரிசையாக நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது பின்னால் அதிவேகமாக வந்த பிக்கப் டிரக் வாகனம் ஒன்று, திடீரென கட்டுப்பாட்டை இழந்து தடம் புரண்டு சாலையை விட்டு விலகி துறவிகள் மீது பயங்கரமாக மோதியது.

டிரக் மோதிய வேகத்தில் 5 பவுத்த துறவிகள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்துத் தகவலறிந்து வந்த உள்ளூர் மீட்புக் குழுவான 'ருவாம் ஜெய் முக்தஹான் மீட்புச் சங்கம்' காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியது. எனினும், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் மேலும் 4 துறவிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால், மொத்த பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது.

தற்போது 13 துறவிகள் முக்தஹான் மாகாண அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 3 துறவிகளின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக அம்மாகாண நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விபத்தை ஏற்படுத்திய பிக்கப் டிரக் வாகனத்தை ஓட்டி வந்தது வெறும் 11 வயதே நிரம்பிய ஒரு சிறுவன் என்பது காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அந்த சிறுவன் தனது வீட்டின் முற்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த குடும்பத்திற்குச் சொந்தமான பிக்கப் டிரக் வண்டியை, பெற்றோரின் அனுமதியோ அல்லது அவர்களின் கவனமோ இன்றி ரகசியமாக எடுத்து ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தியுள்ளது ஆரம்பகட்ட விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

விபத்தை ஏற்படுத்திய 11 வயது சிறுவனைத் தற்போது போலீசார் தங்களது பாதுகாப்புக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். தாய்லாந்து நாட்டின் சட்டப்படி மைனர் சிறுவர்களிடம் நேரடியாக விசாரணை நடத்த முடியாது என்பதால், மாநில குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் முன்னிலையில் அச்சிறுவனிடம் முறையான விசாரணை நடத்தப்படும் எனப் போலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விபத்து நடந்த பகுதியின் கண்காணிப்பு கேமரா காட்சிகளைப் பெற்றுப் போலீசார் விபத்தின் முழுமையான காரணம் குறித்துத் தொடர்ந்து புலனாய்வு செய்து வருகின்றனர்.