கட்டுப்பாட்டை இழந்து, அரசு பள்ளிக்குள் புகுந்த லாரி - 9 மாணவர்கள் படுகாயம்.. மருத்துவமனையில் அனுமதி!
திருச்சியில் இருந்து நாமக்கல் நோக்கிச் சென்ற லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அரசு மேல்நிலைப் பள்ளியின் சுற்றுச்சுவரை இடித்துக்கொண்டு வளாகத்திற்குள் புகுந்த விபத்தில் 7-ஆம் வகுப்பு மாணவர்கள் 9 பேர் காயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
திருச்சியில் இருந்து நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ஹரிஹரன் என்பவரால் ஓட்டிச் செல்லப்பட்ட சரக்கு லாரி, பாலசமுத்திரம் பகுதி அருகே வந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. தறிக்கெட்டு ஓடிய அந்த லாரி, சாலையோரம் இருந்த பாலசமுத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் சுற்றுச்சுவரைப் பலமாக இடித்துத் தள்ளிக்கொண்டு பள்ளி வளாகத்திற்குள்ளேயே புகுந்தது.
லாரி மோதிய வேகத்தில் பள்ளியின் சுற்றுச்சுவர் பலத்த சத்தத்துடன் இடிந்து விழுந்தது. அந்தச் சமயத்தில் சுவருக்கு அருகில் நின்றுகொண்டிருந்த 7-ஆம் வகுப்பு மாணவர்கள் 9 பேர் மீது சுவரின் இடிபாடுகள் விழுந்ததில் அவர்கள் படுகாயமடைந்தனர். மேலும், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 4 மிதிவண்டிகளும் லாரியில் சிக்கி முற்றிலுமாக உருக்குலைந்தன.
விபத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர்களும் அப்பகுதி பொதுமக்களும் உடனடியாக விரைந்து வந்து, காயமடைந்த மாணவர்களை மீட்டுத் தொட்டியம் மற்றும் நாமக்கல் அரசு மருத்துவமனைகளுக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் விபத்து குறித்து விசாரணை நடத்தினர். லாரியை அதிவேகமாகவும் கவனக்குறைவாகவும் இயக்கி விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் ஹரிஹரன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி நேரத்தில் அரசுப் பள்ளி வளாகத்திற்குள் லாரி புகுந்த இச்சம்பவம் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.