2 ஆண்டுகளில் 9,000 விரிவுரையாளர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் விஸ்வநாதன் பேட்டி!
தஞ்சாவூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன், தமிழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் இரண்டு ஆண்டுகளுக்குள் முழுமையாக நிரப்பப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் குந்தவைநாச்சியார் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் 'கல்லூரி உள்ளக குழுவினருக்கான பயிற்சி' தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவை அமைச்சர் விஸ்வநாதன் கலந்துகொண்டு அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார்.
விழாவைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் விஸ்வநாதன், தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 9 ஆயிரம் விரிவுரையாளர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக மூன்று கட்டங்களாகத் தேர்வு செய்யப்பட்டு நிரப்பப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
முதல் கட்டத்தேர்வு கடந்த 2025-ஆம் ஆண்டு நடத்தப்பட்டு இதற்கான அறிவிப்பு இந்த ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் முதற்கட்டமாக 2,708 பேராசிரியர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர். அதனைத் தொடர்ந்து நடைபெறும் 2 மற்றும் 3-ஆம் கட்டத் தேர்வுகளில் தலா 3 ஆயிரம் பேர் வீதம் தேர்வு செய்யப்பட்டு, மொத்தம் உள்ள 9 ஆயிரம் காலிப்பணியிடங்களும் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் முழுமையாக நிரப்பப்படும் என அவர் உறுதியளித்தார்.
இதனிடையே, விழாவில் அமைச்சர் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென மின் தடை ஏற்பட்டு அரங்கம் இருள் சூழ்ந்தது. எனினும் தனது பேச்சை நிறுத்தாமல் தொடர்ந்து பேசிய அமைச்சர், சுமார் 10 நிமிடங்களுக்குப் பிறகு மின்சாரம் திரும்பியதும், நிகழ்ச்சியை முடித்து அமரும்போது செய்தியாளர்களைப் பார்த்து மின்தடை குறித்தே நாளை செய்தி வெளியிடுவீர்கள் எனக் கூறி சிரித்தபடி உரையாடியது குறிப்பிடத்தக்கது. கல்லூரியில் இருந்த மின்மாற்றியில் ஏற்பட்ட பழுது காரணமாகவே இந்த மின்தடை ஏற்பட்டது.