‘தவெக-வில் 95% அதிமுகவினர் தான் உள்ளனர்; எம்.ஜி.ஆர், ஜெ. தொண்டர்களின் புகலிடம் விஜய்!’ - புகழேந்தி நெகிழ்ச்சி!
"சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்திற்குள் நான் சென்றபோது, எனக்குத் தவெக அலுவலகத்திற்கு வந்த உணர்வே இல்லை; மாறாக ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்த உணர்வுதான் ஏற்பட்டது. ஏனெனில், அங்குத் தற்பொழுது 95 சதவீதம் பேர் உண்மையான அதிமுக தொண்டர்கள் தான் நிரம்பிக் கிடக்கிறார்கள்" என்று தவெக-வில் இணைந்துள்ள வி. புகழேந்தி தெரிவித்துள்ளார்.
சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் விஜய் முன்னிலையில் இன்று மதியம் முதல் 'மாற்றுக் கட்சியினர் இணையும் விழா' நடைபெற்று வருகிறது. முன்னாள் எம்.எல்.ஏ பொன் ஜெய்சீலன், தயாரிப்பாளர் ஜே.எம்.பஷீர் ஆகியோரைத் தொடர்ந்து, அதிமுகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளரும், மூத்த அரசியல்வாதியுமான வி. புகழேந்தி இன்று முதலமைச்சர் விஜய் முன்னிலையில் தவெக-வில் முறைப்படி இணைந்தார்.
கட்சியில் இணைந்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த புகழேந்தி, "முதலமைச்சர் விஜய் அவர்களின் மக்கள் நலக் கொள்கைகளை ஏற்று இன்று நான் தவெக-வில் இணைந்துள்ளேன். பனையூர் அலுவலகத்திற்குள் நுழைந்த எனக்குப் பெரும் ஆச்சரியம் காத்திருந்தது. அங்குத் திரண்டிருந்தவர்களில் 95 சதவீதம் பேர் மாற்று முகங்கள் அல்ல, அனைவரும் என்னுடன் பல ஆண்டுகள் அதிமுக-வில் பயணித்த ரத்தத்தின் ரத்தங்களான தூய தொண்டர்கள் தான்."
முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் வருகை: "அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள், இந்நாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் எனப் பல முக்கிய முகங்களை நான் அங்கே நேரில் பார்த்தேன். அவர்கள் அனைவரும் எடப்பாடி பழனிசாமியின் தலைமையற்ற நிர்வாகத்தால் சோர்வடைந்து, இன்று தவெக-வை நோக்கித் தங்களது அரசியல் பயணத்தைத் திருப்பியுள்ளனர்."
முன்னதாக நேற்று வேலூரில் நடைபெற்ற உள்கட்சி ஆலோசனைக் கூட்டத்தில், "தவெக-வின் அரசியல் வளர்ச்சியை நாம் கணிக்கத் தவறிவிட்டோம்" என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மிகுந்த வேதனையுடன் பேசியிருந்தார்.
இபிஎஸ்-ன் அந்த ஓப்பந்தத்திற்கு வலு சேர்க்கும் விதமாகவே இன்று புகழேந்தியின் பேட்டி அமைந்துள்ளது. "எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்களுக்கான ஒரே புகலிடமாக இன்று முதலமைச்சர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மட்டுமே திகழ்கிறது. அதிமுக-வின் வாக்கு வங்கி முழுமையாகத் தவெக பக்கம் நகர்ந்துவிட்டதையே பனையூர் காட்சிகள் காட்டுகின்றன" என்று புகழேந்தி பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.