99-வது கலங்கரை விளக்க தின கொண்டாட்டம் | மாமல்லபுரம் கலங்கரை விளக்கத்தை சுற்றுலா பயணிகள் பார்வையிட இலவச அனுமதி!

 

99-வது கலங்கரை விளக்க தினத்தைக் கொண்டாடும் வகையில், மாமல்லபுரம் கலங்கரை விளக்கத்தை சுற்றுலாப் பயணிகள் இன்று (செப். 21) ஒரு நாள் மட்டும் எந்தவித நுழைவுக் கட்டணமும் இன்றி இலவசமாகச் சென்று கண்டு களிக்கலாம் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஆண்டுதோறும் செப்டம்பர் 21-ம் தேதி நாடு முழுவதும் கலங்கரை விளக்க தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, மாமல்லபுரம் கலங்கரை விளக்கத்தையும் அதனுடன் இணைந்த அருங்காட்சியகத்தையும் சுற்றுலாப் பயணிகளும் உள்ளூர் மக்களும் இன்று ஒரு நாள் மட்டும் முழுமையாக இலவசமாகச் சுற்றிப் பார்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தச் சிறப்புச் சலுகை சுற்றுலாப் பயணிகளிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாமல்லபுரத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கலங்கரை விளக்கம் 135 ஆண்டுகள் பழமை வாய்ந்தது ஆகும். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், வங்கக்கடலில் பயணம் செய்யும் கப்பல்கள் மற்றும் படகுகளுக்கு வெளிச்சத்தின் மூலம் அடையாளம் காட்டி, அவைகள் பாதுகாப்பாக விலகிச் செல்ல உதவும் வகையில் இது வடிவமைக்கப்பட்டது.

மொத்தம் 84 அடி உயரமும், 93 படிக்கட்டுகளையும் கொண்டுள்ள இந்தக் கலங்கரை விளக்கம் கடந்த 1887-ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. தற்போது மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இது நிர்வகிக்கப்பட்டு வருகிறது.