9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை - பக்கத்து வீட்டு இளைஞர் வெறித்தனம்!

 

மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டம் ஜூன்னார் தாலுகாவில் உள்ள பிம்பல்வண்டி கிராமத்தில், 9 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த 25 வயது பக்கத்து வீட்டு இளைஞரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

வீட்டில் சிறுமி தனியாக தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த போது, கொய்யாப் பழம் தருவதாக ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்ற அதே பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி, அருகிலுள்ள கரும்புத் தோட்டத்தில் வைத்துச் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.

சிறுமியைக் காணாமல் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது சந்தேக நபர் சிறுமியை அழைத்துச் சென்றது தெரியவந்தது. தொடர்ந்து நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

இக்கொடூரச் சம்பவத்திற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து, குற்றவாளிக்கு உடனடி மரண தண்டனை வழங்கக் கோரியும், வழக்கை விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்க வலியுறுத்தியும் கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் புனே-நாசிக் தேசிய நெடுஞ்சாலையில் திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இச்சம்பவத்திற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள மாநில அரசுத் தரப்பு, வழக்கை விரைவு நீதிமன்றத்திற்கு மாற்றி, குற்றவாளிக்குக் கடுமையான தண்டனை பெற்றுத்தரப்படும் என உறுதி அளித்துள்ளது.