வங்கக் கடலில் உருவாகும் புதிய புயல்!! மாண்டஸ் என பெயர்!!
அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாகவும் இது மேற்கு வடமேற்கு நோக்கி நகரும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் இது நாளை மாலை தென் கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகும் என தெரிகிறது. மேலும் மேற்கு வடமேற்கு திசையில் நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும். அவ்வாறு புயலாக மாறும் போது அது தென்மேற்கு வங்கக் கடல் பகுதிக்கு வரும்.
அதாவது டிசம்பர் 8 ஆம் தேதி காலை தமிழகம் - புதுவை மற்றும் அதனையொட்டி உள்ள தெற்கு ஆந்திர பிரதேசம் பகுதிகளை வந்தடையும். இதனால் வடதமிவகம், புதுவை, தெற்கு ஆந்திராவில் 8ஆம் தேதி கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உலக வானிலை மையத்தில் உறுப்பினர்களாக உள்ள நாடுகள் புயல்களுக்கு பெயர்களை பரிந்துரைத்து வருகிறது. அந்த வகையில் வெப்ப மண்டல புயல்களுக்கு பெயர் வைக்கும் குழுவில் வங்கதேசம், இந்தியா, ஈரான், மாலத்தீவுகள், மியான்மர், ஓமன், பாகிஸ்தான், கத்தார், சவுதி அரேபியா, இலங்கை, தாய்லாந்து, ஐக்கிய அரபு நாடுகள் ஏமன் ஆகிய 13 நாடுகள் பெயர்களை பரிந்துரைக்கும்.
இதனிடையே வங்கக் கடலில் உருவாகும் புயலுக்கு மாண்டஸ் என்ற பெயர் வைக்க ஐக்கிய அரபு அமீரகம் பரிந்துரைத்துள்ளது. உலக வானிலை மையத்தின் தலைவராக இருப்பவர் அப்துல்லா அல் மாண்டஸ். இவர் ஐக்கிய அரபு நாடுகளை சேர்ந்தவர். இவரது பெயரில் உள்ள மாண்டஸ் என்ற பெயரைத்தான் அந்த நாடு புயலுக்கு பரிந்துரைத்துள்ளதாக தெரிகிறது.