மாணவர்கள் ஸ்கூல் பேக்கில் ஆணுறை.. அரசு உத்தரவு உண்மையா?

 

இந்தியாவில் பெண்கள், குழந்தைகள், பாலியல் தொடர்பான வன்முறை, குற்றச்செயல்கள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க பல்வேறு மாநிலங்களில் சட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், கர்நாடகாவில் 18 வயதுக்கு குறைவான நபர்களுக்கு ஆணுறை உள்ளிட்ட கருத்தடை சாதனங்களை விற்க கர்நாடக அரசு தடைவிதித்து உத்தரவு பிறப்பித்ததாக தகவல்கள் பரவின.

எனினும் அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் தரப்பில் இருந்து இது தொடர்பாக எந்த தகவல்களும்  வெளிவரவில்லை. ஆனாலும் ஆணுறை தொடர்பான தகவல் இரண்டு நாட்களாக கர்நாடகாவில் காட்டு தீயாக பரவியது. 

இந்த நிலையில்,  இது தொடர்பாக கர்நாடக அரசு விளக்கம் அளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அதன்படி, கர்நாடக மாநில கல்வித்துறை அதிகாரிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பெங்களூரு நகரில் உள்ள பல பள்ளிகளில் மாணவர்களின் பைகளில் சோதனை நடத்தினர்.  சோதனையில் 8, 9 மற்றும் 10 ம் வகுப்பு மாணவர்களின் பைகளில் இருந்து செல்போன்கள் மட்டுமல்லாது, ஆணுறைகள், கருத்தடை மாத்திரைகள், லைட்டர்கள், சிகரெட்டுகள் ஆகியவை பிடிப்பட்டன. இந்த விவகாரம்  நாடு முழுவதும் அதிர்வை உண்டாக்கியது.  

18 வயதுக்குட்பட்ட சிறார்கள் ஆணுறை, கருத்தடை சாதனங்களை பயன்படுத்தும் சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்ட நிலையில், கர்நாடக மருந்துகள் கட்டுப்பாட்டு துறை 18 வயது குறைவானவர்களுக்கு ஆணுறை, கருத்தடை மாத்திரைகள், வலிநிவாரணி மருந்துகள் போன்றவற்றை விற்க தடை விதித்து சுற்றறிக்கை வெளியிட்டதுள்ளதாக செய்திகள் பரவின. 

சிறார்களுக்கு இவ்வாறு தடை விதிப்பதன் மூலம், அவர்கள் மேலும் தவறான பாதைக்கு செல்லக்கூடும் என்ற ஆர்வலர்கள் கவலை தெரிவித்தனர்.  

இந்நிலையில், விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசு தரப்பு விளக்கம் தெரிவித்துள்ளது. அதில், அரசு தடை உத்தரவு ஏதும் பிறப்பிக்கவில்லை. அதேவேளை, மருந்து விற்பனை செய்பவர்கள் சிறார்களுக்கு உரிய ஆலோசனை வழங்க வேண்டும். யார் வாங்க வேண்டும் என்பது குறித்து உரிய விளக்கம் தர வேண்டும் என்பதையே அறிவுறுத்தியுள்ளோம் என தெரிவித்துள்ளது. எனவே, சிறார்கள் ஆணுறை வாங்க தடை ஏதும் விதிக்கவில்லை என கர்நாடக அரசு கூறியுள்ளது.