அரங்கனைக் காண குவிந்த பக்தர்கள்! எதிரொலித்த ரெங்கா.. ரெங்கா.. கோஷம்! பகல்பத்து ஒன்பதாம் திருநாள்!
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் நம்பெருமாள் வைகுண்ட ஏகாதசி பெருவிழா 22-23 பகல் பத்து ஒன்பதாம் திருநாள் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அர்ஜுன மண்டபத்தில், இன்று நம்பெருமாள், அரையர் சேவையில் முத்துக்குறி அபிநயத்திற்காக, முத்தங்கி அணிந்து, முத்து பாண்டியன் கொண்டை, முத்து கர்ண பத்ரம், முத்து அபயஹஸ்தம், மார்பில் நாச்சியார் - அழகிய மணவாளன் பதக்கம், வெள்ளைகல் ரங்கோன் அட்டிகை, 6 வட பெரிய முத்து சரம், பின் சேவையாக - முத்தங்கியுடன், பருத்திப்பூ பதக்கம், தொங்கல் கைகளில் சாற்றி, சேவை சாதிக்கிறார்.
ஊர் இலேன் காணி இல்லை
உறவு மற்று ஒருவர் இல்லை
பாரில் நின் பாத மூலம்
பற்றிலேன் பரம மூர்த்தி!
காரொளி வண்ணனே என்
கண்ணனே கதறு கின்றேன்,
ஆருளர் களைக் கணம்மா
அரங்க மா நகர் உளானே
- தொண்டரடிப்பொடியாழ்வார்.
பூலோகத்தில் அன்னதானம் செய்வது முன்னேழ் பிறவிக்கும் பின்னேழ் பிறவிக்கும் புண்ணியமாகும். தானங்களில் தானத்தை பெற்றுக்கொள்பவருக்கு "போதும்" என்ற நிறைவை அளிப்பது அன்னதானம் ஒன்றேயாகும். தானத்தில் சிறந்த அன்னதானத்தை அதுவும் பூலோக வைகுண்டமான அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் மகா பிரசாதமாக அன்னதானம் வழங்க பக்தர்கள் தாராளமாக நிதிஉதவி வழங்க கேட்டுக் கொள்கிறோம் என ஆலயத்தின் சார்பாக வேண்டுகோள் வைக்கப்பட்டிருக்கிறது.
திருக்கோயிலில் 13.09.2012 அன்றைய முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்டு நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் தினசரி காலை 8.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை சிறப்பாக. நடைபெற்று வருகிறது. நாளொன்றுக்கு சுமார் 4000 பக்தர்கள் வரை உணவருந்துகின்றனர். அன்னதானத்தில் சாதம், சாம்பார், ரசம். மோர். கூட்டு, பொறியல், ஊறுகாய், வழங்கப்படுகிறது. நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்திற்கு நன்கொடையாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள் எனக்கூறியிருக்கும் தேவஸ்தானம் நாள் ஒன்றுக்கு 4000 நபர்களுக்கு உணவு வழங்க 1.40.000/செலுத்தவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
அன்னதான திட்டத்திற்கு நன்கொடை அளிக்க விரும்பும் அன்பர்கள் திருக்கோயில் அலுவலகத்தில் உரிய தொகை செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அன்னதான திட்டத்திற்கு வழங்கும் நிதிக்கு வருமானவரி சட்டப்பிரிவு 80 G-ன் கீழ் வரிவிலக்கும் உண்டு குறைந்த அளவில் நிதி அளிக்க விரும்புவோர் ரூ 50/- ரூ 100/ ரூ 250) ரூ.100/- ரூ. 1300க்கான அன்னதான நன்கொடைசீட்டுகளை பெற்றுநாள் முழுவதும் அன்னதான திட்டத்தில் பங்கேற்க அன்புடன் வரவேற்கிறோம் என்கிறார்கள். விடுமுறை தினம் தொடங்கிவிட்டதால் பக்தர்கள் கூட்டத்தால் திக்கு முக்காடி திகைத்து நிற்கிறது ஸ்ரீரங்கம், இன்று மாலை முதல் வெளி மாவட்டங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பக்தர்களின் பாதுகாப்பிற்காக வந்து குவிவார்கள்.
தானங்களில் சிறந்த தானம் அன்னதானம்...
"உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே" மணிமேகலை
"அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்" -ஆண்டாள் பாசுரம்