டிஜிட்டல் கரன்சியால் மின்னனு பொருளாதாரம் வலுப்பெறும்.. ரிசர்வ் வங்கி !!

 

பஞ்சாப் மாநில தலைநகர் சண்டிகாரில், ரிசர்வ் வங்கி ஏற்பாடு செய்த டிஜிட்டல் கரன்சி தொடர்பான கருத்தரங்கம் நடந்தது. இதில் இந்திய வர்த்தகத்தில் டிஜிட்டல் கரன்சி தொடர்பாக விவாதிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய ரிசர்வ் வங்கி செயல் இயக்குனர் அஜய்குமார் சவுத்ரி பல்வேறு தகவல்களை வெளியிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், ரிசர்வ் வங்கி சில மாதங்களுக்கு முன்பு டிஜிட்டல் கரன்சியை மொத்த பயன்பாட்டுக்கும், சில்லரை பயன்பாட்டுக்கும் தனித்தனியாக சோதனை முறையில் அறிமுகப்படுத்தியது. பணத்தின் பரிணாமத்தில் இது ஒரு மைல்கல். சோதனை முறை முடிந்து, டிஜிட்டல் கரன்சியை படிப்படியாக அறிமுகப்படுத்த உள்ளோம் என்றார்.

தற்போது, 115 நாடுகள் டிஜிட்டல் கரன்சி வெளியிட பரிசீலித்து வருகின்றன. ஜி20 அமைப்பை சேர்ந்த 18 நாடுகள் இதில் அடங்கும் என அஜய்குமார் சவுத்ரி கூறினார். டிஜிட்டல் கரன்சி என்பது சாதாரண பணத்தின் டிஜிட்டல் வடிவம் மட்டுமே. அதை சாதாரண பணத்துக்கான மாற்றுவழியாக கருதக்கூடாது. சாதாரண பணத்துக்கான அனைத்து மதிப்பும் டிஜிட்டல் கரன்சிக்கு உள்ளது. சாதாரண பணத்தைப்போல பாதுகாப்பு அம்சங்களும் உள்ளன.

ஆனால், சாதாரண பணத்துக்கு அளிப்பதுபோல், டிஜிட்டல் கரன்சிக்கு வட்டி அளிக்கப்படாது. டிஜிட்டல் கரன்சி, மின்னணு பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்தும். பணம் செலுத்தும் முறையை மேலும் திறம்பட மாற்றும். சாதாரண பணத்தை கையாள்வதில் உள்ள செலவை குறைக்கும், எனவும் அவர் தெரிவித்தார்.