உத்தரப் பிரதேசத்தில் சிறுவனை கடித்த நாய்…  உரிமையாளருக்கு ரூ.10,000 அபராதம்…

 

கடந்த சில நாள்களாகவே செல்லப் பிராணிகளான நாய், பூனை போன்றவை மூலம் மனிதர்கள் தாக்கப்படுவது அதிகரித்து வருகிறது. இதனால், உத்தரப் பிரதேசத்தில் செல்லப்பிராணிகளை வளர்ப்பதற்கு நொய்டா நிர்வாகம் நிபந்தனைகளை விதித்துள்ளது. அதன்படி, நாய், பூனை முதலான செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்கள் ஜனவரி 31 2022 முதல் பதிவு செய்திருக்க வேண்டியது அவசியம்.  தாங்கள் வளர்க்கும் செல்லப் பிராணிகள் மூலம் ஏதேனும் காயங்கள் ஏற்பட்டால், ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும்.  கருத்தடை மற்றும் நோய் எதிர்ப்பு மருந்துகளை செல்லப் பிராணி அல்லது நாய்களுக்கு வழங்குவது கட்டாயம். இதில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் மாதத்திற்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நொய்டாவில் பள்ளி மாணவனை நாய் கடித்ததால், நாயின் உரிமையாளருக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவிலுள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் பள்ளி மாணவன்   லிஃப்டில் தனது தாயுடன் பள்ளிக்குக் கிளம்பியுள்ளார்இதனிடையே லிஃப்டில் நாயுடன் அதன் உரிமையாளர் நுழைந்துள்ளார்.

அப்போது திடீரென சீருடை அணிந்திருந்த மாணவனின் கையை நோக்கிப் பாய்ந்த நாய், கையில் கடித்துள்ளது. இந்த காட்சிகள் லிஃப்டில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.  இதுகுறித்து சிறுவனின் பெற்றோர்கள் போலீசில் புகார் செய்ததன் பேரில், பள்ளி மாணவனைக் கடித்த நாயின் உரிமையாளருக்கு நொய்டா நிர்வாகம் ரூ.10,000 அபராதம் விதித்துள்ளது.