மத்திய அரசு பணிக்கான தேர்வு.. தமிழக இளைஞர்களுக்கு சூப்பர் அறிவிப்பு !!

 

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் எழுத்துத் தேர்வுகளில், வினாத் தாட்கள் தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் இடம்பெற வேண்டும் என்று பல்வேறு மாநில அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர்.

முன்னதாக, நடைபெற்ற ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை எழுத்துத் தேர்வுகள் (CGL Examination 2022) அறிவிப்பில் ஆங்கிலம் மற்றும் இந்தி  மட்டுமே இடம்பெற்றிருந்தது. இதற்கு, கடும் கண்டனம் எழுந்தது. திமுக எம்பி,கனிமொழி, இந்திய அரசின் இறையாண்மை, அதன் பன்மைத்துவத்தில் உள்ளது. மாறாக, அனைத்திலும் ஒற்றைத்துவத்தை புகுத்திட நினைப்பது ஜனநாயகப் படுகொலை, என கூறியிருந்தார். இதேபோல் நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். 

இந்நிலையில்,  2022 ஆண்டுக்கான பன்னோக்கு பணியாளர் மற்றும் ஹவல்தார் தேர்வு  (Multi-Tasking (Non-Technical) Staff, and Havaldar Examination) அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நேற்று வெளியிட்டது. பொதுவாக, இந்த பதவிக்கான எழுத்துத் தேர்வு இரண்டு தாள்களாக நடத்தப்படும். முதல் தாள் கொள்குறி வகை சார்ந்த கேள்விகள் கேட்கப்படும். இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே கேள்விகள் இடம்பெறும்.

இரண்டாவது தாளில், கொடுக்கப்பட்ட தலைப்பில் சிறு கட்டுரை எழுது வேண்டும். ஆங்கிலம் அல்லது இந்திய அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளில் இந்த கட்டுரையை எழுதலாம்.

இந்நிலையில், நேற்று வெளியான அறிவிக்கையில்,  தமிழ் உள்ளிட்ட 13 பிராந்திய மொழிகளில் முதற் தாள் கேள்விகள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, காலியாக உள்ள 11,409 காலி பணியிடங்களுக்கான தேர்வை தமிழ் உட்பட 13 மாநில மொழிகளில் எழுத மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அனுமதி அளித்துள்ளது. அந்த வகையில் தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உட்பட 13 மாநில மொழிகளில் இந்த தேர்வு நடத்தப்பட உள்ளது.

தகுதி உள்ளவர்கள் பிப்.17-ம் தேதிக்குள் https://ssc.nic.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, தமிழக மாணவர்களுக்கு கூடுதல் பலத்தை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.