இந்தியா-வங்காளதேசம் இடையேயான ரயில் சேவை மீண்டும் தொடக்கம்
இந்தியாவில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக மக்களின் தேவைகளை பொறுத்து மட்டுமே ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. அதுவும் முன்பதிவு செய்யப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில்கள், பயணிகள் ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. தற்போது இந்தியா முழுவதும் பாதிப்புக்கள் குறையத் தொடங்கி படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.
இந்நிலையில் மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தா- வங்காளதேச தலைநகர் டாக்கா மைத்ரே மற்றும் மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தா - குல்னா பந்தன் பயணிகள் ரயில் சேவையை சுமார் இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு மார்ச் 26-ந் தேதி முதல் இந்திய ரயில்வே தொடங்க உள்ளது. இரு அண்டை நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை அதிகரிக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பெட்ராபோல்-பெனாபோல் எல்லை மற்றும் பிற ரயில் சோதனைச் சாவடிகள் வழியாக இந்தியா-வங்காளதேச வணிக ரயில் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
ஏற்கனவே நடைமுறையில் இருந்த அட்டவணைப்படி இந்த ரயில்கள் இயங்கும் என இரு நாட்டு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.