ஆவின் பால் விலை உயர்வா?? அமைச்சர் விளக்கம் !!
ஆவின் நிறுவனங்களில் பால் விலை உயர இருப்பதாக வெளியான செய்தி தவறானது என பால்வளத்துறை அமைச்சர் நாசர் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக அரசின் நிறுவனமான ஆவின் பால் மற்றும் பொருட்களுக்கு எப்போதும் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. ஐஸ்கிரீம், நெய், குல்பி, இனிப்பு வகைள், பால் பவுடர் போன்றவை அதிகளவில் விற்பனை ஆகின்றன. தனியார் நிறுவனங்களை விட விலை குறைவாக இருப்பதோடு மட்டுமின்றி உயர் தரத்தில் ஆவின் பால் பொருட்கள் தயாரிக்கப்படுவதால் உடனுக்குடன் விற்று தீர்ந்து விடுகின்றன. தீபாவளி, பொங்கல், போன்ற பண்டிகை நாட்களில் ஆவின் இனிப்புகள் மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
அதில் திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டது. அதன் பின் ஜி.எஸ்.டி., வரி உயர்வை காரணம் காட்டி, தயிர், நெய், மோர் விலையை 5 மற்றும் 12 சதவீதம் என உயர்த்தியது. இந்நிலையில் தற்போது சில தனியார் பால் நிறுவனங்கள் பால் விலையை 4 ரூபாய் வரை உயர்த்தி இருக்கின்றனர். அதில் கடந்த வாரம் ஆவின் நிறுவனம் புதிதாக 10 புதிய பொருட்கள் அறிமுகம் செய்துள்ளது. அந்த வகையில் பலாப்பழ ஐஸ்கிரீம், வெள்ளை சாக்லேட், கோல்ட் காபி, வெண்ணெய் கட்டி, பாஸந்தி, ஆவின் ஹெல்த் மிக்ஸ், பாலாடைக் கட்டி, அடுமனை யோகர்ட் ஆவின் பால் பிஸ்கட், ஆவின் வெண்ணெய் முறுக்கு போன்ற பத்து பொருள்களின் பட்டியல் வெளியாகி இருக்கிறது.
இதனை சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் அலுவலகத்தில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் அறிமுகம் செய்து வைத்தார். அதன் பின் பேசிய அவர் நிதிநிலை அறிக்கையின் போது ஆவின் சார்பாக 36 புதிய அறிவிப்புகள் தெரிவிக்கப்பட்டது. அதில் இதுவரை 26 அறிவிப்புகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள 10 பொருள்கள் காரணமாக அரசிற்கு ரூ.2 கோடி லாபம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆவின் தண்ணீர் பாட்டில் விற்பனை எப்போது தொடங்கப்படும் என்பது விரைவில் அறிவிக்கப்படும். தனியார் பால் விலை அதிகரிப்பால் ஆவின் பால் விலை உயர்த்தப்படாது என அவர் தெரிவித்துள்ளார்.