பண மழை விவகாரம்.. கைதான இளைஞர் பகீர் வாக்குமூலம் !!

 

மேம்பாலத்தில் நின்று ரூபாய் நோட்டுகளை வீசிய நபர் கைது செய்யப்பட்டார். அவர் அளித்த விளக்கம் போலீசாரை அதிரவைத்தது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள கே.ஆர்.மார்க்கெட் பகுதியில் உள்ள மேம்பாலத்தில் நின்றுகொண்டு நபர் ஒருவர், திடீரென 10 ரூபாய் நோட்டுக்களை அள்ளி வீசினார். அதனை அவ்வழியாக நடந்துசென்ற மக்கள், வாகன ஓட்டிகள் முண்டியடித்துக்கொண்டு ரூபாய் நோட்டுகளை எடுக்க முயன்றனர். 

இந்த சம்பவத்தால் எப்போது பரபரப்பாக காணப்படும் கே.ஆர்.மார்க்கெட் சாலையில் 2 மணிநேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது, மேம்பாலத்தில் மேல் நின்று கோட் ஷூட் அணிந்துகொண்டு, கழுத்தில் கடிகாரத்துடன் இளைஞர் ஒருவர் ரூபாய் நோட்டுகளை வீசியது தெரியவந்தது. சிறிது பரபரப்புக்கு பிறகு அந்த சாலை இயல்பு நிலைக்கு திரும்பியது.

எனினும், பணத்தை வீசிய அந்த நபர் யார்? எதற்காக அப்படி செய்தார், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்ட டிப்டாப் ஆசாமி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். வெளியான வீடியோவில் பணத்தை வீசிய இளைஞரின் முகமும் தெளிவாக இருந்ததால் அதன்பேரில் விசாரணையை முடுக்கிவிட்டனர்.

இந்நிலையில், பாலத்தில் நின்று பொது மக்கள் மத்தியில் பணத்தை வீசி பொது போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்திய நபர் அருண் என்பது தெரியவந்தது. விசாரணையில் அவர் யூடியூபர் என்றும், பப்ளிசிட்டிக்காக இந்த வேலையில் ஈடுபட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் யூடியூபர் அருணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.