மக்களே உஷார்…. தமிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு…

 

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக அவ்வபோது கன முதல் மிக கன மழை பெய்து வந்தது. இதனால் ஆங்காங்கே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இதனிடையே கடந்த இரு தினங்களாக மழை சற்று தணிந்திருந்த நிலையில் பொதுமக்கள் சற்று நிம்மதியடைந்தனர். இந்நிலையில் வரும் 20, 21ம் தேதிகளில் தமிழகம் மற்றும் புதுவையில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி 19ம் தேதி வலுப்பெற கூடும் என்பதால், வரும் 20, 21 ஆகிய தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் 20ம் தேதி செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.

21ம் தேதி காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் காற்று 55 கி.மீ., வேகத்தில் வீச வாய்ப்புள்ளதால் 21ம் தேதி வரை மீனவர்கள் வங்கக்கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.