ஈரோட்டில் ரூ.2 கோடி கடத்தல் !! வாக்காளர்களுக்கு கொண்டு செல்லப்பட்டதா?

 

ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியைச் சேர்ந்த விகாஷ் என்பவர் காரில் கோயம்புத்தூருக்கு வந்துள்ளார். நேற்று (ஜனவரி 21) அதிகாலை சுமார்  4 மணி அளவில் ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே உள்ள இலட்சுமி நகர் பகுதியில் அவர் காரில் வந்துகொண்டிருந்த போது 5 பேர் கொண்ட கும்பல் விகாஷின் காரை வழிமறித்து, காரில் இருந்த விகாஷை இறக்கி விட்டுவிட்டு காரை கடத்திச் சென்றுள்ளது.

இதுகுறித்து விகாஷ் சித்தோடு போலீசாரிடம் புகார் அளித்தார். அதோடு காரில் சுமார் 2 கோடி ரூபாய் பணம் இருந்ததாக கூறினார். இதுகுறித்து தீவிர விசாரணையை தொடர்ந்து வந்த நிலையில், கடத்தப்பட்ட கார் மீட்டப்பட்டது. கோவை தேசிய நெடுஞ்சாலையில் கங்காபுரம் டெக்ஸ்வேலி அருகே கடத்தப்பட்ட கார் நின்று கொண்டிருப்பது தெரியவந்தது.

மேலும் விகாஸ் ராவலிடம் விசாரணை நடத்தப்பட்டபோது, காரில் ரூ. 2 கோடி பணம் இருந்ததாகவும், அதை கோவையில் உள்ளவருக்கு கொடுப்பதற்காக தனது உரிமையாளர் கொடுத்தனுப்பியதாகவும் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. காரில் பணம் வைத்திருந்த விஷயமே தனக்குத் தெரியாது என்றும் டிரைவர் விகாஸ் ராவல் கூறுகிறார். கார் திருடு போனது குறித்து உரிமையாளரிடம் கூறியபோதுதான்,  அவர் காரில் பணம் இருந்த தகவலை என்னிடம் கூறினார் எனவும் தெரிவித்தார்.

மேலும் போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு அங்கு சோதனை நடத்தப்பட்டது. அந்த நாய் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. விகாஸ் ராவல் யாரிடம் கொடுப்பதற்காக ரூ.2 கோடியை கொண்டு சென்றார்? இது ஹவாலா பணமா? உண்மையில் யாருடைய பணம் என பல்வேறு கோணங்களில் போலீஸார் டிரைவர் விகாஸிடம் ரகசியமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடைபெறுவதால், தேர்தலுக்கு ஓட்டு போடும் பொதுமக்களுக்கு பணப் பட்டுவாடா செய்வதற்காக கொண்டுவரப்பட்டதா எனவும்  விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.