தலிபான்கள் பிடிவாதம்.. ஆப்கானிஸ்தானில் குளிருக்கு 124 போ் பலி !

 

அண்மைக்காலமாக அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் நிலவிய கடும் பனிப்பொழிவால் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். அமெரிக்காவில் பனியால் மூடப்பட்ட காரில் சிக்கி சிலர் உயிரிழந்த சோகமும் நடந்தது.

இந்த நிலையில், தற்போது இந்தியாவின் அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் சில நாட்களாக கடுமையான பனிப்பொழிவு உள்ளது. குறிப்பாக தலைநகர் காபூல் உள்ளிட்ட நகரங்களில் வெப்பநிலை கடுமையாக சரிந்துள்ளது. அப்பகுதிகளில் கண்களால் எங்கு பார்த்தாலும் பனிக்கட்டியாக கொட்டிக்கிடக்கிறது.

அங்கு கடந்த 2 வாரங்களாக நிலவி வரும் மிகக் கடுமையான குளிருக்கு இதுவரை 124 போ் பலியானதாக அந்த நாட்டு பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தன்னார்வ தொண்டு அமைப்புகளில் பெண்கள் பணியாற்றுவதற்கு தலிபான்கள் தடை விதித்துள்ளனா். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பேரிடா் காலங்களில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளக் கூடிய பல தொண்டு அமைப்புகள் தங்களது நடவடிக்கைகளை நிறுத்திவைத்துள்ளன. இதனால் மக்களுக்கான சேவை, உதவிகள் கிடைப்பது தடைபட்டுள்ளது. பெரும்பாலான மக்களுக்கு அத்தியாவசிய மற்றும் மருத்துவ உதவியும் கிடைக்கவில்லை.

இதுவும் கடும் குளிருக்கு பலியாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. இருந்தாலும், தொண்டு நிறுவனங்களில் பெண்கள் பணியாற்ற விதிக்கப்பட்டுள்ள தடை தொடரும் என்று தலிபான்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனா்.

இதேநிலை நீடித்து தனது நிலைப்பாட்டில் தலிபான்கள் உறுதியாக இருந்தால், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. மேலும் பனிப்பொழிவால் ஆயிரக்கணக்கான கால்நடைகளும் உயிரிழந்துள்ளன.