தொடரும் கொடூரம்.. அப்பாவி மக்கள் 9 பேர் சுட்டுக்கொலை !!

 

அமெரிக்காவில் அடுத்தடுத்து இரண்டு நாட்களில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 20 பேர் கொல்லப்பட்டனர்.

அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் நேற்று முன் தினம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சீனாவின் புத்தாண்டு கொண்டாட்டத்தை கொண்டாடிய மக்களை குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் 11 பேர் கொல்லப்பட்டனர். 75  வயது முதியவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் உயிரிழந்தனர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் அமெரிக்காவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

கடந்த ஆண்டு மே மாதத்தில் நடத்தப்பட்ட உவால்டே பள்ளித் தாக்குதலுக்குப் பிந்தைய மிக மோசமான தாக்குதல் இதுவாகும். சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் கொண்டாடப்படும் சந்திரப் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது நடத்தப்பட்ட இந்தச் சம்பவம் இனவெறித் தாக்குதலாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் தாக்குதல் நடத்தியவா் 75 வயது ஹூ கேன் டிரான் என்ற ஆசியா் எனவும், அவா் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டதாகவும் காவல் துறையினர்  அறிவித்துள்ளனா்.

இந்த கொடூர தாக்குதல் நடந்து ஒரு நாளுக்குப் பிறகு அங்கு மீண்டும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளது அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு கலிஃபோர்னியாவில் சான் பிரான்சிஸ்கோவிற்கு தெற்கே உள்ள நிறுவனத்தில் நேற்றிரவு நடைபெற்ற இரண்டு துப்பாக்கிச் சூடு சம்பங்களில் 9 பேர் பலியாகினர்.

அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டு தீவிர சோதனை நடத்தப்படுகிறது. அமெரிக்காவில் பெருகிவரும் துப்பாக்கி கலாச்சாரத்துக்கு முடிவுகட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.