கூலிப்படையை ஏவி மனைவியை கொலை செய்த  கணவன்!! திடுக்கிடும் பிண்ணனி!!

 

 

ராஜஸ்தானில் சாலை விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில்  இன்சுரன்ஸ் பணத்திற்காக கணவனே கூலி படையை ஏவி கொலை செய்தது விசாரணையில் அம்பலமானது.  ஜெய்ப்பூரை சேர்ந்தவர் மகேஷ் சந்த். இவர் 2015ம் ஆண்டு ஷாலு தேவி என்பரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். திருமணமான இரண்டு ஆண்டுகளுக்கு பின் தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ஷாலு தனது மகளுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். மேலும் 2019ம் ஆண்டு கணவர் மீது ஷாலு, குடும்ப வன்முறை புகாரும் கொடுத்துள்ளார்.

 

இந்நிலையில் கடந்த 5ம் தேதி தனது சகோதரர் ராஜூவுடன் பைக்கில் அனுமன் கோயிலுக்கு சென்றபோது பின்னால் வேகமாக வந்த கார் மோதியதில் ஷாலு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த ராஜூ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை விபத்து வழக்காக கருதிய நிலையில் இதில் சந்தேகம் இருப்பதாக ஷாலுவின் குடும்பத்தினர் போலீசாரிடம் தெரிவித்தனர். இதனால் மகேஷிடம் போலீசார் கிடுக்குபிடி விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், மகேஷ் கூலிப்படையை ஏவி மனைவியை கொன்றதை ஒப்புக்கொண்டார்.

 

மனைவி மீது மகேஷ் காப்பீடு செய்திருந்தார். காப்பீடு செய்து ஒரு ஆண்டு ஆகிவிட்டதால் ஷாலு இயற்கை மரணம் அடைந்தால் ரூ.1கோடியும், விபத்தில் இறந்தால் ரூ.1.90 கோடியும் இன்சூரன்ஸ் தொகையாக கிடைக்கும் என்பதால் மனைவியை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார் மகேஷ். இதற்காக ரூ.10லட்சம் கொடுத்து கூலிப்படையை வைத்துள்ளார். அவர்களுக்கு ரூ.5.5லட்சம் முன்பணம் கொடுத்துள்ளார். இதனிடையே ஷாலு கோயிலுக்கு செல்லும்போது கூலிபடையினர் விபத்து ஏற்படுத்தி அவரை கொலை செய்தாக மகேஷ் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து அவரையும்    கூலிப்படையை சேர்ந்த இரண்டு பேரையும் போலிசார் கைது செய்து அவர்களிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.