அடுத்த ஆப்பு.. 'ஸ்பாடிபை' நிறுவனமும் ஆட்குறைப்பு !!

 

தொடர்ந்து பல்வேறு பெருநிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்து பணி நீக்க அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன. இதற்கு உக்ரைன் - ரஷ்யா போர், நிதி நிலைமை, கச்சா எண்ணெய் விநியோகம், அரசியல் நிலைத்தன்மை போன்ற பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.

அந்த வகையில் பிரபல பாடல் இசை தளமான ஸ்பாடிபை நிறுவனமும் உலகம் முழுவதும் தனது ஊழியர்களில் 6 சதவிகிதம் பேரை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதன்படி, ஒட்டுமொத்தமாக 600 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய ஸ்பாடிபை முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என ஸ்பாடிபை தெரிவித்துள்ளது.

முன்னதாக, உலகம் முழுவதும் உள்ள தங்கள் ஊழியர்களில் 10 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்ய உள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. அதேபோல், அமெரிக்காவின் பிரபல முதலீட்டு வங்கி, நிதி சேவை நிறுவனமான கோல்ட்மென் சச்ஸ் சுமார் 3 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்தது.

பிரபல ஆன்லைன் வணிக நிறுவனமான அமேசான் நிறுவனமும் தங்கள் ஊழியர்களில் கணிசமான அளவிற்கு பணி நீக்கம் செய்யும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. கூகுள் தாய் நிறுவனமான ஆல்பாபெட் 12 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்தது. அதேபோல், இந்தியாவின் பிரபல ஐ.டி. நிறுவனமான விப்ரோ தங்கள் ஊழியர்களில் 452 பேரை பணி நீக்கம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உலகம் முழுவதும் ஐடி நிறுவனங்கள், பெருநிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நிறுவன ஊழியர்களும் கவலையில் மூழ்கியுள்ளனர்.