மீண்டும் முதலில் இருந்தா? - ஒரே மாதத்தில் கொரோனா மரணங்கள் 20% அதிகரிப்பு !!  

 

கொரோனா வைரஸின் ஆல்ஃபா, பீட்டா, காமா, டெல்டா, ஒமிக்ரான் என பல வகையான திரிபுகள் உலகின் பல்வேறு நாடுகளில் பரவின. முந்தைய வகை கொரோனா வைரசில் இருந்து ஒன்றுக்கும் மேற்பட்ட மரபணு பிறழ்வுகளால் உண்டாகும்போது புதிய வகை கொரோனா வைரஸ் ஒரு 'திரிபு' (variant) என்று அழைக்கப்படும். உலகம் முழுவதும் பல்வேறு திரிபுகள் இதுவரை வந்திருக்கின்றன.

கடந்த சில மாதங்களாக உலகளவில் குறைந்த கொராேனா மீண்டும் தொடங்கி இருக்கிறது. குறிப்பாக சீனாவில் உருமாறிய கொரோனா வைரசால் தினமும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அத்துடன் மரணமும் அதிகரித்து வருகிறது. இதை உலக சுகாதார அமைப்பும் உறுதி செய்துள்ளது. அங்கு கடந்த டிசம்பர் 19ஆம் தேதி முதல் கடந்த 15ஆம் தேதி வரையிலான சுமார் 1 மாத காலகட்டத்தில் உலக அளவில் கொரோனா மரணங்கள் 20 சதவீதம் வரை அதிகரித்து இருப்பதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், '2022 டிசம்பர் 19 முதல் 2023 ஜனவரி 15 வரையிலான கடந்த 28 நாட்களில் சுமார் 1.3 கோடி புதிய பாதிப்புகளும், சுமார் 53 ஆயிரம் புதிய மரணங்களும் கொரோனாவால் நிகழ்ந்துள்ளன. இது முந்தைய 28 நாட்களை ஒப்பிடுகையில் முறையே 7 சதவீத சரிவும் (பாதிப்பு), 20 சதவீத அதிகரிப்பும் (மரணம்) ஆகும்' என கூறியுள்ளது. கடந்த 15-ந் தேதி நிலவரப்படி உலக அளவில் மொத்தம் 66 கோடிக்கு அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டும், 67 லட்சத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்தும் உள்ளதாக உலக சுகாதார அமைப்பின் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

முன்னதாக, கொரோனா உயிரிழப்பை கணக்கிடுவதில் சீனா கடைபிடிக்கும் நடைமுறை மிகவும் குறுகலானது, என்று உலக சுகாதார அமைப்பு விமர்சித்துள்ளது. ஆனால் சீனாவோ, தனது புள்ளிவிவரங்கள் மிகவும் துல்லியமானவை என்றே எப்போதும் கூறி வருகிறது.