100 அடி நீளத்திற்கு 'பண' மாலை... ஏணி மீதேறி நின்று கெத்து காட்டிய மணமகன் - வைரலாகும் பிரம்மாண்டத் திருமண வீடியோ!
ராஜஸ்தான் மாநிலம் டீக் (Deeg) மாவட்டத்தின் பமன்வாடி கிராமத்தில் நடைபெற்ற திருமண விழா ஒன்று, அங்கு பயன்படுத்தப்பட்ட பிரம்மாண்டமான ரூபாய் நோட்டு மாலையினால் தற்போது நாடு முழுவதும் பேசப்படும் பொருளாக மாறியுள்ளது.
கடந்த ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற்ற இந்தத் திருமணத்தில், மணமகன் ருக்னுதீன் மியோ மற்றும் அவரது மருமகன் அன்சார் மியோ ஆகிய இருவருக்கும் தலா 100 அடி நீளமுள்ள மாலைகள் அணிவிக்கப்பட்டன.
மாலையின் நீளம் மற்றும் கனம் அதிகமாக இருந்ததால், மணமகன் ஏணியில் ஏறிச் சென்று அதனை அணிந்து கொண்டார். தரையில் நின்றிருந்த உறவினர்கள் மாலையைச் சமநிலைப்படுத்தித் தாங்கிப் பிடித்திருந்தனர். இந்த மாலை முழுக்க முழுக்க 500 மற்றும் 100 ரூபாய் நோட்டுகளால் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன் பிரம்மாண்டத்தைக் காட்டும் 20 விநாடி வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
இது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு உள்ளூர் கிராமத் தலைவர் அப்துல் மஜீத் விளக்கம் அளித்துள்ளார். "இது எங்கள் மேவாட் பிராந்தியத்தின் ஒரு பகுதி பாரம்பரியம். இது போன்ற மாலைகள் ஹரியானாவின் நூஹ் பகுதியில் வாடகைக்குக் கிடைக்கின்றன. மக்கள் தங்கள் வீட்டு விசேஷங்களைச் சிறப்பிக்க இவற்றை வாடகைக்கு எடுத்து வந்து காட்சிப்படுத்துகின்றனர்" எனத் தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, டீக் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷரன் கோபிநாத் காம்ப்ளே இது குறித்து விசாரணை நடத்தினார். போலீசரின் முதற்கட்ட விசாரணையில் அந்த ரூபாய் நோட்டு மாலைகள் வாடகைக்கு எடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பண மோசடி அல்லது சட்டவிரோத நடவடிக்கைகள் ஏதும் கண்டறியப்படவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். ராஜஸ்தானின் கிராமப்புறங்களில் இத்தகைய விசித்திரமான மற்றும் பிரம்மாண்டமான சடங்குகள் அவ்வப்போது ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகின்றன.