சாலையைக் கடந்த 12 அடி நீள ராஜநாகம்.. படமெடுத்து ஆடியதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

 

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அருகே 12 அடி நீளமுள்ள பிரம்மாண்ட ராஜநாகம் ஒன்று திடீரெனச் சாலையைக் கடந்து படம் எடுத்து ஆடிய சம்பவம், அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகளிடையே பெரும் பரப்பரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் ஜி.எஸ்.டி. சாலையில் இருந்து நல்லம்பாக்கம் வரை செல்லும் மாநில நெடுஞ்சாலையின் இருபுறமும் காப்புக்காடுகள் மற்றும் அடர்ந்த வனப்பகுதிகள் அமைந்துள்ளன. நேற்று காலை நல்லம்பாக்கத்தில் இருந்து ஊனைமாஞ்சேரி கிரஷர் பகுதிக்குச் செல்லும் சாலையை ஒட்டியுள்ள காப்புக்காட்டில் இருந்து சுமார் 12 அடி நீளமுள்ள ராஜநாகம் ஒன்று திடீரெனச் சாலையைக் கடக்க வெளியே வந்தது.

சாலையின் நடுவே வந்த அந்த மிகப்பெரிய ராஜநாகம் திடீரெனப் படம் எடுத்து ஆடியதால், அந்த வழியாகப் பயணித்த இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்து தங்களது வாகனங்களைச் சாலையோரமாக நிறுத்தினர்.

வாகன ஓட்டிகள் பலரும் இந்த அபூர்வக் காட்சியினைத் தங்களது செல்போன்களில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர். சில நிமிடங்கள் சாலையிலேயே படம் எடுத்து ஆடிய ராஜநாகம், பின்னர் மெதுவாகச் சாலையைக் கடந்து மீண்டும் எதிரே இருந்த காப்புக்காட்டிற்குள் சென்று மறைந்தது.