14 வயது சிறுமிக்குப் பாலியல் வன்கொடுமை... கருக்கலைப்பு செய்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. மீது போக்சோ வழக்குப்பதிவு!
ஜார்க்கண்ட் மாநிலம் சிம்தேகா தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பூஷன் பாரா மீது, 14 வயது பழங்குடியினச் சிறுமியைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி, கட்டாயக் கருக்கலைப்பு செய்ததாக எழுந்த புகாரின் பேரில் ராஞ்சி காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மக்கள் பிரதிநிதி ஒருவரே இத்தகைய கொடூரக் குற்றச்சாட்டில் சிக்கியிருப்பது அம்மாநில அரசியலில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம் சிம்தேகா மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது பழங்குடியினச் சிறுமியின் கல்விக்கு உதவுவதாகக் கூறி இந்தச் சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம், பாதிக்கப்பட்ட 14 வயதுச் சிறுமியைப் பள்ளியில் சேர்த்துப் படிக்க வைப்பதாகக் கூறி காங்கிரஸ் எம்.எல்.ஏ. பூஷன் பாரா அழைத்துச் சென்றுள்ளார். அதனைத் தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் 6-ஆம் தேதி எம்.எல்.ஏ. பூஷன் பாரா தன்னைப் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாகப் பாதிக்கப்பட்ட சிறுமி காவல்துறை மற்றும் நீதித்துறை விசாரணையில் பரபரப்புச் சாட்சியம் அளித்துள்ளார்.
பாலியல் வன்கொடுமையின் விளைவாக அந்தச் சிறுமி கர்ப்பமடைந்ததைத் தொடர்ந்து, உண்மையை மறைப்பதற்காகக் கட்டாயக் கருக்கலைப்பு செய்யப்பட்டதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த வாக்குமூலம் மற்றும் புகாரின் அடிப்படையில், ராஞ்சி காவல்துறையினர் எம்.எல்.ஏ. பூஷன் பாரா மீது குழந்தைகள் மீதான பாலியல் குற்றத்தடுப்புச் சட்டம், கட்டாயக் கருக்கலைப்பு மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சிறுமியின் மருத்துவப் பரிசோதனை அறிக்கைகள் மற்றும் சாட்சியங்களைச் சேகரித்துள்ள காவல்துறையினர், இந்த வழக்கில் தொடர்புடைய பிற நபர்கள் குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்களுக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டிய சட்டமன்ற உறுப்பினரே 14 வயதுப் பழங்குடியினச் சிறுமிக்கு இழைத்த இந்தக் கொடுமைக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பல்வேறு அரசியல் கட்சிகளும் சமூக அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன.