2½ ஏக்கர் நிலத்தை எழுதித்தர மறுத்த பாட்டியைக் குத்திக் கொன்ற 16 வயது பேரன்... சேலத்தில் கொடூரம்!
சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அருகே சொத்து தகராறில், தனக்குச் சொந்தமான விவசாய நிலத்தை எழுதித்தர மறுத்த 70 வயது பாட்டியைக் கத்தியால் குத்திக் கொடூரமாகக் கொலை செய்த 16 வயது பேரனைப் போலீசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் கந்தாயி (70). இவருக்குச் சொந்தமாகக் கொங்கணாபுரம் பகுதியில் 2½ ஏக்கர் விவசாய நிலம் இருந்துள்ளது. இந்த நிலத்தைத் தனது பெயருக்கு எழுதித் தருமாறு கந்தாயியின் 16 வயது பேரன் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து பாட்டியுடன் தகராறில் ஈடுபட்டு, மிரட்டல் விடுத்து வந்துள்ளார். ஆனால், அதற்கு மூதாட்டி கந்தாயி உடன்பட மறுத்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று மீண்டும் நிலம் தொடர்பாக இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த 16 வயது சிறுவன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்துப் பாட்டி கந்தாயியைக் கொடூரமான முறையில் சரமாரியாகக் குத்தியுள்ளார்.
ரத்த வெள்ளத்தில் சரிந்த மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு, அவரது மூத்த பேரன் அபிஷேக் ஓடிவந்துள்ளார். உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த கந்தாயியை மீட்டு, அபிஷேக் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அவசரச் சிகிச்சைக்காகக் கொண்டு சென்றார். ஆனால், அவர் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அபிஷேக் இக்கொலைச் சம்பவம் குறித்துக் கொங்கணாபுரம் போலீசாருக்குத் தகவல் அளித்தார்.
பாட்டியைக் கொலை செய்த பின்னர் தலைமறைவாக முயன்ற 16 வயது சிறுவன், போலீசாரின் பிடி இறுகுவதை அறிந்தவுடன் கொங்கணாபுரம் காவல் நிலையத்தில் நேரில் சென்று சரணடைந்தார்.
இதனைத் தொடர்ந்து போலீசார் சிறுவனைக் கைது செய்து, கொலைக்குப் பயன்படுத்திய கத்தியைப் பறிமுதல் செய்தனர். மேலும், கந்தாயியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகச் சேலம் அரசு மோகன்குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சொத்து தகராறில் பாட்டியையே 16 வயது பேரன் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் சேலம் மாவட்ட மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.