16 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை; சொந்த தாய்மாமன் வெறித்தனம்!

 

கர்நாடக மாநிலத்தில் 16 வயது சிறுமிக்கு ஆசை வார்த்தைகள் கூறித் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக அவரது சொந்த தாய்மாமனைப் போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம், ஹடாடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 16 வயது பள்ளி மாணவி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். சிறுமியின் வீட்டின் அருகிலேயே அவரது சொந்த தாய்மாமன் வசித்து வந்துள்ளார். சிறுமி மீது மிகுந்த அன்பு செலுத்துவது போல நடித்த அவர், பல்வேறு ஆசை வார்த்தைகளைக் கூறி அச்சிறுமியைத் தனது முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளார்.

உறவினர் என்பதை நம்பி மாமாவின் வீட்டிற்குச் சென்ற சிறுமியை, அவர் வலுக்கட்டாயமாகப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளார். சொந்த மாமாவே இத்தகைய கொடூரச் செயலில் ஈடுபட்டதால் மனமுடைந்த சிறுமி, தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்துத் தனது பெற்றோரிடம் கதறி அழுதபடி உண்மையைக் கூறியுள்ளார். இச்சம்பவம் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள், உடனடியாக ஹடாடி காவல் நிலையத்தில் முறைப்படி புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சிறுமிக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொண்டு தீவிர விசாரணை நடத்தினர். அதில் மாமா பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது சந்தேகத்திற்கு இடமின்றி உறுதியானது. இதன்பின்னர் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதை அறிந்ததும் தாய்மாமன் உடனடியாகத் தலைமறைவானார்.

தலைமறைவான குற்றவாளியைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்ட நிலையில், அவர் பதுங்கியிருந்த இரகசிய இடத்தை அறிந்து அங்கு விரைந்த காவல்துறையினர் அவரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

பாதுகாப்பாக இருக்க வேண்டிய சொந்த தாய்மாமனே சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்டவரிடம் காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.