17 வயது சிறுவன் ஓட்டி வந்த கார் மோதி கோர விபத்து - ஒருவர் பலி!
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் 17 வயது சிறுவன் அதிவேகமாக ஓட்டி வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து மோதியதில், முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத்தின் மதுராநகர் பகுதியில் நேற்று காலை இக்கோர விபத்து நிகழ்ந்துள்ளது.
வேகமாக வந்த கார் திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியது. மேலும், சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 7 வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதி சேதப்படுத்தியது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த ராஜேந்திர குமார் (60) மற்றும் அவரது சகோதரர் பிரபாகர் ஆகியோர் தூக்கி வீசப்பட்டுப் பலத்த காயமடைந்தனர்.
இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தீவிர சிகிச்சை பலனின்றி ராஜேந்திர குமார் உயிரிழந்தார். பிரபாகருக்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காரை ஓட்டி வந்தது 17 வயது சிறுவன் என்பதை அறிந்த அப்பகுதி மக்கள், அவரை மடக்கிப் பிடித்துக் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். விபத்து நடந்த போது காரில் மொத்தம் 3 பேர் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த விபத்து தொடர்பான திடுக்கிடும் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், காரை ஓட்டி வந்த சிறுவனைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.