ஃபேன்சி கடைக்குள் புகுந்து 17 வயது சிறுமிக்கு தாலி கட்டிய வாலிபர்... 'சிங்கப்பெண்' படையைக் கண்டதும் தப்பியோட்டம்!

 

மதுரை மாவட்டம் திருமங்கலம் நகர்ப் பகுதியில் உள்ள வணிக வளாகக் கடை ஒன்றில், 17 வயதுடைய சிறுமிக்கு ரகசியமாகத் தாலி கட்டிய கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருமங்கலம் நகர்க் காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், மதுரை திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர், அப்பகுதியில் உள்ள ஒரு பிரபல ஃபேன்சி கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்றிரவு அந்தக் கடையின் உள்ளேயே வைத்து, அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் அச்சிறுமியைக் கட்டாயப்படுத்தி, திடீரென கடைக்குள் புகுந்து, சிறுமிக்கு தாலி கட்டியுள்ளார். இது  குறித்து அருகில் இருந்தவர்கள் மூலமாகத் தகவல் பரவியது.

ஃபேன்ஸி ஸ்டோர்ல வெச்சே தாலி கட்டுறா 😂 pic.twitter.com/JbqzgSHuz0

— Sᴘᴀʀʀ✪ᴡ_Tʀ✪ʟʟ🦅 (@itz_sparrow03) June 15, 2026


சிறுமிக்குக் கட்டாயத் திருமணம் செய்யப்படுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், மதுரை மாவட்டப் பெண்களின் பாதுகாப்புக்காகப் பிரத்யேகமாகச் செயல்பட்டு வரும் 'சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை' போலீசார் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து சென்றனர்.

காவல் துறையின் அதிரடிப்படை வாகனமும், பெண் போலீசாரும் சம்பவ இடத்திற்கு வருவதைத் தெரிந்துக் கொண்ட அந்த இளைஞர், தாலி கட்டிய சிறுமியை அங்கேயே விட்டு விட்டு, நைசாகக் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி பேன்ஸி கடையில் இருந்து தப்பி ஓட்டம் பிடித்தார்.

உடனே ஃபேன்சி கடைக்குள் நுழைந்த சிங்கப்பெண் அதிரடிப்படை போலீசார், நிலைகுலைந்து, அழுதுக் கொண்டிருந்த 17 வயது சிறுமியைப் பத்திரமாக மீட்டனர். பின்னர், சிறுமிக்கு உரிய மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டு, குழந்தைகள் நலக் குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டார்.

மைனர் சிறுமியை கட்டாயத் திருமணம் செய்ய முயன்ற குற்றத்திற்காக, தப்பியோடிய வாலிபர் மீது குழந்தை திருமண தடைச் சட்டத்தின் கீழ் திருமங்கலம் போலீசார் முறைப்படி வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஃபேன்சி கடையில் இருந்த கண்காணிப்புக் கேமரா காட்சிகளைப் போலீசார் கைப்பற்றி, அதன் அடிப்படையில் தலைமறைவாக உள்ள அந்த இளைஞர் யார், சிறுமிக்குத் தெரிந்தவரா அல்லது கடையின் உரிமையாளரா என்ற கோணங்களில் தனிப்படை அமைத்துத் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், வீட்டில் பதுங்கி இருந்த இளைஞரைப் போலீசார் கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.