7 பேருக்கு மறுவாழ்வு அளித்த 22 வயது இளைஞர் - கோவையில் அரசு மரியாதையுடன் உடல் அடக்கம்!

 

"உடல் உறுப்பு தானம் என்பது ஒரு மனிதன் செய்யும் ஆகச்சிறந்த தியாகம்" என்பதை நிரூபிக்கும் வகையில், நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஒருவர், தனது மரணத்திற்குப் பின் 7 பேருக்குப் புதிய வாழ்க்கையைத் தந்துள்ளார். அவரது இந்த மகத்தான செயலைப் போற்றும் வகையில், தமிழக அரசு சார்பில் அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் - விஜயகுமாரி தம்பதியரின் மகன் மோனிக்ராஜ் (22). துடிப்பான இளைஞரான இவர் விவசாயம் செய்து வந்தார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில், விவசாய நிலத்தில் ஓடிக் கொண்டிருந்த மின் மோட்டாரை நிறுத்தச் சென்ற போது எதிர்பாராத விபத்து நேரிட்டது.

அவர் கழுத்தில் அணிந்திருந்த மப்ளர் எதிர்பாராதவிதமாக மோட்டாரில் சிக்கியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த மோனிக்ராஜின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை உறவினர்கள் மீட்டு, கோவையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

மருத்துவர்களின் தீவிர சிகிச்சை பலனின்றி,  மோனிக்ராஜூக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. ஒரு இளம் வயதில் மகனை இழந்த துயரம் ஒருபுறம் வாட்டினாலும், அவனது உடல் உறுப்புகள் மூலம் மற்றவர்கள் வாழட்டும் என்ற உயரிய நோக்கில், மோனிக்ராஜின் பெற்றோர் அவரது உறுப்புகளைத் தானம் செய்யத் துணிச்சலான முடிவை எடுத்தனர்.

பெற்றோரின் ஒப்புதலைத் தொடர்ந்து, மருத்துவக் குழுவினர் மோனிக்ராஜின் உடலில் இருந்து இதயம், சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல் மற்றும் கண்கள் ஆகிய உறுப்புகளை அறுவை சிகிச்சை மூலம் தானமாகப் பெற்றனர். தானமாகப் பெறப்பட்ட இதயம், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிக்காக விமானம் மூலம் விரைவாகக் கொண்டு செல்லப்பட்டது.

சிறுநீரகம், கல்லீரல் மற்றும் கண்கள் ஆகியவை கோவை மற்றும் பிற மாவட்டங்களில் உள்ள காத்திருப்போர் பட்டியலில் இருந்த நோயாளிகளுக்குப் பொருத்த அனுப்பி வைக்கப்பட்டது. உடல் உறுப்பு தானம் செய்பவர்களுக்கு அரசு மரியாதை செலுத்தப்படும் என்ற தமிழக முதலமைச்சரின் அறிவிப்பின்படி, மோனிக்ராஜின் உடலுக்கு வட்டாட்சியர் முன்னிலையில் அரசு மரியாதை செலுத்தப்பட்டது. மருத்துவர்கள், செவிலியர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கண்ணீர் மல்க அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.