"இன்னும் ஏன் சாகாம இருக்க..?" கணவர் கேட்டதால் ஆத்திரத்தில் வீடியோ வெளியிட்டு 23 வயது புதுமணப்பெண் தற்கொலை!

 

உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத்தில், திருமணமாகி 1 மாதமே ஆன 23 வயது இளம் பெண் அம்ரீன் ஜஹான், தனது மாமியார் வீட்டின் கொடுமை மற்றும் கணவரின் மன உளைச்சல் தாங்காமல் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அம்ரீன் ஜஹானுக்குக் கடந்த மாதம் காதல் திருமணம் நடந்துள்ளது. இவரது கணவர் பெங்களூருவில் வெல்டராக வேலை செய்து வரும் நிலையில், அம்ரீன் மொராதாபாத்தில் உள்ள கணவரின் குடும்பத்துடன் தங்கியிருந்தார்.

காதல் திருமணம் என்பதால் திருமணமான நாளில் இருந்தே மாமனார் ஷாஹித் மற்றும் நாத்தனார் கதீஜா ஆகியோர் தனக்கு உணவு வழங்காமல், மின்சார இணைப்பைத் துண்டித்து, காதல் கணவனும் அருகில் இல்லாத நிலையில் தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாக அம்ரீன் குற்றம் சாட்டியுள்ளார். தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக அம்ரீன் தனது செல்போனில் கண்ணீருடன் வீடியோ ஒன்றைப் பதிவு செய்துள்ளார்.

அந்த வீடியோவில், "எனக்கு உடல்நிலை சரியில்லாத போது செய்த மருத்துவச் செலவைக் கேட்டுத் துன்புறுத்துகிறார்கள். என் கணவரிடம் பேசி, இவர்கள் செய்கிற கொடுமைகள் குறித்து கூறினால் , 'நீ ஏன் இன்னும் சாகாமல் இருக்கிறாய்?' என்று கேட்கிறார். நாத்தனாரும் மாமானாரும் அவரது காதில் என்னைப் பற்றித் தவறாகக் கிசுகிசுக்கிறார்கள். என்னால் இதை இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது" என உருக்கமாகப் பேசியுள்ளார்.

அம்ரீனின் தந்தை சலீம் கூறுகையில், தற்கொலைக்கு சிறிது நேரத்திற்கு முன்பு மகள் செல்போனில் அழைத்துத் தன்னை மாமியார் வீட்டினர் அடித்துத் துன்புறுத்துவதாகவும், உடனடியாக வந்து காப்பாற்றுமாறும் கதறியதாக தெரிவித்துள்ளார். அவர் விரைந்து செல்வதற்குள் அம்ரீன் உயிரிழந்துள்ளார்.

தந்தை சலீம் அளித்த புகாரின் அடிப்படையில், மொராதாபாத் காவல்துறையினர் அம்ரீனின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவாக உள்ள மாமியார் வீட்டார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.