கணவருக்குத் தன் சிறுநீரகத்தை வழங்கி உயிர்காத்த 25 வயது மனைவி - சீனாவில் நெகிழ்ச்சி!

 

சீனாவில், மருத்துவ ரீதியாக சிறுநீரகம் பொருந்துவதற்கு மிகக் குறைந்த வாய்ப்புகளே இருந்தபோதிலும், இளம் மனைவி ஒருவர் தனது கணவருக்குத் தனது சிறுநீரகத்தைத் தானமாக வழங்கி அவரது உயிரைக் காப்பாற்றியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த சுங் (33) என்பவருக்குப் பிறவித் குறைபாடு காரணமாக 4 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்தன. அவர் வாரத்திற்கு மூன்று முறை டயாலிசிஸ் செய்து கொண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காகக் காத்திருந்தார்.

கணவரின் உயிரைக் காப்பாற்றத் தனது சிறுநீரகத்தைத் தர முன்வந்த அவரது மனைவி லியாங் (25) அவர்களின் முடிவை மருத்துவர்கள் பரிசீலித்தனர். இரத்த சம்பந்தம் இல்லாத தம்பதிகளுக்குள் சிறுநீரகம் பொருந்துவதற்கான சாத்தியக்கூறு 10 சதவீதத்திற்கும் குறைவு என அவர்கள் எச்சரித்தனர்.

லியாங் தனது முடிவில் உறுதியாக இருந்த நிலையில், மேற்கொள்ளப்பட்ட பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளில் தம்பதியர் இருவருக்கும் அரிதான ஒரே இரத்த வகை இருப்பது கண்டறியப்பட்டது.

குவாங்சூ மருத்துவப் பல்கலைக்கழகத்தின் மூன்றாவது இணை மருத்துவமனையில் நடைபெற்ற இந்த மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிக்கப்பட்டு, கணவரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.