பிறந்து 4 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை ₹7 லட்சத்திற்கு விற்பனை.. தாய் உட்பட 4 பேர் மீது வழக்கு!

 

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் பிறந்து 4 நாட்களே ஆன ஆண் குழந்தையைப் பணத்திற்காக ரூ.7 லட்சத்திற்கு விற்பனை செய்த அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இச்சம்பவத்தில் இடைத்தரகராகச் செயல்பட்ட ஆட்டோ ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பண்ருட்டி ஆர்.எஸ். மணி நகரைச் சேர்ந்த மஞ்சு என்ற பாத்திமா (26) என்பவருக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ளது. மீண்டும் கர்ப்பமான பாத்திமா, வறுமை மற்றும் குடும்பச் சூழல் காரணமாகப் பிறக்கப்போகும் குழந்தையை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளார்.

பண்ருட்டியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஜாபர்கான் (44) என்பவரிடம் இதுகுறித்துத் தெரிவிக்கவே, அவர் குழந்தை இல்லாத தம்பதியைத் தேடிப் பிடித்து விற்பனைக்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளார்.

கடந்த அக்டோபர் 19-ஆம் தேதி பண்ருட்டி அரசு மருத்துவமனையில் பாத்திமாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. 11 ஆண்டுகளாகக் குழந்தை இல்லாத திருச்சி மாவட்டம் சமயபுரத்தைச் சேர்ந்த ரேணுகாதேவி என்பவரிடம், அக்டோபர் 22-ஆம் தேதி பச்சிளம் குழந்தை ஒப்படைக்கப்பட்டது.

குழந்தையை விற்கத் தாயிடம் ரூ.4.50 லட்சம் கொடுக்கப் பேசப்பட்ட நிலையில், இடைத்தரகர் ஜாபர்கான் வாங்குபவரான ரேணுகாதேவியிடம் ரூ.7 லட்சம் பெற்றுக்கொண்டு, பாத்திமாவிடம் ரூ.4.50 லட்சம் மட்டுமே கொடுத்துள்ளார்.

ஜாபர்கான் கூடுதலக் பணம் வசூலித்ததை அறிந்த பாத்திமா, தனது கணவருடன் சென்று கூடுதல் பணம் கேட்கவே இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, இவ்விவகாரம் பண்ருட்டி காவல் துறைக்குச் சென்றுள்ளது.

தகவலறிந்த பண்ருட்டி போலீசார் உடனடியாக திருச்சிக்கு விரைந்து சென்று ரேணுகாதேவியிடம் இருந்த பச்சிளம் குழந்தையைப் பத்திரமாக மீட்டனர். குழந்தைகள் நலக் காப்பகத் திட்ட ஒருங்கிணைப்பாளர் சித்ராவதி முன்னிலையில் குழந்தை மீண்டும் தாயிடம் ஒப்படைக்கப்பட்டது.

சித்ராவதி அளித்த புகாரின் பேரில், குழந்தையின் தாய் பாத்திமா, இடைத்தரகர் ஜாபர்கான், அவரது உறவினர் முபாரக்கான் மற்றும் குழந்தையை வாங்கிய ரேணுகாதேவி ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இடைத்தரகராகச் செயல்பட்ட ஆட்டோ ஓட்டுநர் ஜாபர்கானைக் கைது செய்த காவல்துறையினர், இந்த சட்டவிரோத குழந்தை விற்பனை கும்பலில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.