கலிபோர்னியாவில் 5.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்... லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையம் அருகே தீப்பிழம்புகள்!

 

தெற்கு கலிபோர்னியாவின் மன்ஹாட்டன் கடற்கரைக்கு அருகே 5.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்திற்கு தெற்கே உள்ள சுத்திகரிப்பு ஆலையில் தீப்பிழம்புகள் வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்ட போதிலும், அது விபத்து அல்ல என்றும் பாதுகாப்பு நடைமுறைகளின் ஒரு பகுதி என்றும் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.

தெற்கு கலிபோர்னியாவின் மன்ஹாட்டன் கடற்கரைக்கு அருகே காலை 9:30 மணியளவில் 5.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது சுமார் 7.6 மைல் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

இந்த நிலநடுக்கம் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் பசடேனா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உணரப்பட்டது. சுனாமி ஆபத்து ஏதும் இல்லை எனத் தேசிய சுனாமி எச்சரிக்கை மையம் உறுதிப்படுத்தியுள்ளது.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்திற்குத் தெற்கே உள்ள செவ்ரான் சுத்திகரிப்பு ஆலையில் இருந்து தீப்பிழம்புகள் மற்றும் புகை வெளியேறியது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.

இது குறித்து விளக்கம் அளித்த எல் செகுண்டோ நகர நிர்வாகம், நிலநடுக்கம் போன்ற செயல்முறைக் குறுக்கீடுகளின் போது ஆலையில் உள்ள உபகரணங்கள் தானாகவே மூடப்பட்டு, அதிகப்படியான வாயுவை வெளியேற்றும் ‘பாதுகாப்பு எரியூட்டல் நிகழ்ந்ததாகவும், இது விபத்து அல்ல என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.

லாஸ் ஏஞ்சல்ஸ் தீயணைப்புத் துறை உடனடியாகப் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தொடங்கி, 106 தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த பணியாளர்கள் மூலம் நிலம், வான் மற்றும் கடல் வழியாகப் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டது.

தற்போது வரை பெரிய அளவிலான கட்டமைப்புச் சேதங்களோ அல்லது காயங்களோ பதிவாகவில்லை. எனினும், நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுமார் 45 நிமிடங்களில் 3.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உட்பட 19 பின் அதிர்வுகள் பதிவாகியுள்ளதால், பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு உள்ளூர் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.