ஆக்ஸிஜன் சிலிண்டருடன் 50 வருடங்களாக ஆட்டோ ஓட்டும் 72 வயது முதியவர்; மருத்துவரின் ஆலோசனையால் மீண்டெழுந்த சுவாரசியம்!
உடல்நலக் குறைவால் ஆக்ஸிஜன் அளவு கடுமையாகக் குறைந்த நிலையிலும், முடங்கிப் போகாமல் தனது வாழ்வாதாரத்திற்காகவும், மன வலிமைக்காகவும் ஆட்டோவிலேயே ஆக்ஸிஜன் சிலிண்டரைப் பொருத்தித் தொடர்ந்து ஆட்டோ ஓட்டி வரும் கேரளாவைச் சேர்ந்த 72 வயது முதியவரின் நெகிழ்ச்சியான கதை சமூக வலைத்தளங்களில் பலருக்கும் உத்வேகத்தை அளித்து வருகிறது.
கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டம் பறம்பில் பஜார் பகுதியைச் சேர்ந்தவர் முகமது (72). இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் தந்தையைப் போலவே ஆட்டோ ஓட்டுநராகவும், இளைய மகன் மெக்கானிக் வேலையும் செய்து வருகின்றனர். முகமது கடந்த 1976-ஆம் ஆண்டு முதல், அதாவது கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக இதே கோழிக்கோடு நகரில் ஆட்டோ ஓட்டித் தனது உழைப்பால் குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறார்.
கடந்த 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகு, எதிர்பாராதவிதமாக முகமதுவின் உடலில் ஆக்ஸிஜன் அளவு படிப்படியாகக் குறையத் தொடங்கியது. மனித உடலில் சாதாரண ஆக்ஸிஜன் அளவு 95 விழுக்காடு இருக்க வேண்டும். ஆனால், முகமதுவுக்கு அது யாரும் எதிர்பாராத விதமாகக் வெறும் 24 விழுக்காடாகக் குறைந்ததால் நிலைமை மிகவும் மோசமடைந்தது. இதனைத் தொடர்ந்து அவர் கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, நீண்ட போராட்டத்திற்குப் பின் உயிர் பிழைத்தார்.
சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய முகமது, 24 மணி நேரமும் ஆக்ஸிஜன் சிலிண்டர் உதவியுடனேயே வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். இதனால் வீட்டிலேயே முடங்கிக் கிடந்த அவரைத் தீவிர மன அழுத்தம் வாட்டியது. முகமதுவுக்குத் தொடர்ந்து மருத்துவச் சிகிச்சை அளித்து வந்த கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர், அவரது மனநிலையைப் புரிந்து கொண்டு ஒரு புதுமையான ஆலோசனையை வழங்கினார். "நீங்கள் இப்படியே வீட்டிலேயே முடங்கிக் கிடந்தால் மேலும் நோயாளியாகி விடுவீர்கள். எனவே, நோயிலிருந்து நீங்கள் மீண்டெழுவதற்கு உங்களது விருப்பமான ஆட்டோ தொழிலை மீண்டும் தொடர வேண்டும்" என்று கூறி அவருக்குத் தனி தைரியத்தையும் ஊக்கத்தையும் அளித்தார்.
மருத்துவரின் ஆலோசனையை வேதவாக்காக எடுத்துக் கொண்ட முகமது, உடனடியாகத் தனது பயணிகள் ஆட்டோவின் ஓட்டுநர் இருக்கைக்குப் பின்னால் ஒரு பெரிய ஆக்ஸிஜன் சிலிண்டரை நிரந்தரமாகப் பொருத்தி வசதி செய்து கொண்டார்.
முகத்தில் எப்போதும் ஆக்ஸிஜன் மாஸ்க்அணிந்தபடியே, தனது பின்சீட்டில் உள்ள சிலிண்டர் உதவியுடன் தினமும் கோழிக்கோடு நகரின் பரபரப்பான வீதிகளில் முகமது கம்பீரமாக ஆட்டோ ஓட்டி வருகிறார். 72 வயதிலும் நோயை எதிர்த்துப் போராடி உழைத்து வரும் இவரது தன்னம்பிக்கையைக் கண்டு கோழிக்கோடு மக்கள் வியந்து பாராட்டி வருகின்றனர். முகமதுவின் ஆட்டோ போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் செல்லவும், வயதான காலத்திலும் உழைக்கும் அவருக்கு உதவவும் கோழிக்கோடு நகரப் போக்குவரத்து போலீசார் மற்றும் சக ஆட்டோ ஓட்டுநர்கள் எப்போதும் அவருக்கு முன்னுரிமை வழங்கிப் பாதுகாப்பாக வழிநடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.