மருத்துவ உலகில் சாதனை - 9 வயது சிறுமியின் கை 15 வயது சிறுமிக்கு வெற்றிகரமாகப் பொருத்தம்!

 

மின்சார விபத்தில் தனது கையை இழந்த 15 வயது சிறுமிக்கு, மூளைச்சாவு அடைந்த 9 வயது சிறுமியின் கை வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டு மருத்துவ உலகில் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.

மும்பை குர்லா பகுதியைச் சேர்ந்த அனம்தா அகமது (15), கடந்த 2022-ஆம் ஆண்டு உறவினர் வீட்டு மாடியில் விளையாடியபோது உயர் அழுத்த மின்சாரக் கம்பி தாக்கியதில் தனது வலது கையைத் தோள்பட்டை வரை இழக்க நேரிட்டது. இருப்பினும் மனம் தளராத அவர், இடது கையால் எழுதி 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 92 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தார்.

இதற்கிடையே குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 9 வயது சிறுமி ரியா மிஸ்திரி மூளைச்சாவு அடைந்த நிலையில், அவரது பெற்றோர் உறுப்பு தானம் செய்ய முன்வந்தனர். ரியாவுடைய வலது கை உடனடியாக மும்பை க்ளெனீகிள்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டு, டாக்டர் நிலேஷ் சத்னி தலைமையிலான மருத்துவக் குழுவினர் சுமார் 12 மணி நேரம் போராடி அனம்தாவின் தோள்பட்டையுடன் கையை வெற்றிகரமாக இணைத்தனர். உலகிலேயே மிக இளம் வயதில் தோள்பட்டை அளவிலான கை மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது இதுவே முதல்முறையாகும்.

வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்து நலம் பெற்று வரும் அனம்தா, தன் வாழ்வை மாற்றிய ரியா மிஸ்திரியின் குடும்பத்தினரைத் தனது சொந்தக் குடும்பமாகக் கருதுகிறார். மேலும், தான் புதிதாகப் பெற்ற கையின் மூலமாகவே ரியாவின் அண்ணன் ஷிவமிற்கு 'ராக்கி' கயிறு கட்டி தனது அன்பையும் நன்றியையும் வெளிப்படுத்தியுள்ளமை பலரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.அ