திமுகவுக்கு பலத்த அடி... தலைவர், பொதுச்செயலாளர் படுதோல்வி!
தமிழக அரசியல் வரலாற்றில் திராவிட முன்னேற்றக் கழகம் பல்வேறு சவால்களையும் தோல்விகளையும் சந்தித்திருந்தாலும், அக்கட்சியின் "தலைவர் ஒருபோதும் தோற்றதில்லை" என்ற பெருமைமிகு வரலாறு 2026 சட்டமன்றத் தேர்தலில் தகர்க்கப்பட்டுள்ளது. முதல்முறையாக திமுகவின் தலைவரும், பொதுச்செயலாளரும் தங்களது தொகுதிகளில் தோல்வியைத் தழுவியிருப்பது அக்கட்சிக்கு மீள முடியாத பலத்த அடியாகப் பார்க்கப்படுகிறது. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் அதிரடி அரசியல் வருகை, திமுகவின் வாக்கு வங்கியில் மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது தற்போது உண்மையாகியுள்ளது.
அசைக்க முடியாத கோட்டையாகக் கருதப்பட்ட கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவிடம் தோல்வியடைந்திருப்பது அக்கட்சித் தொண்டர்களைப் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதேபோல், கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகனும் காட்பாடி தொகுதியில் கடும் பின்னடைவைச் சந்தித்துத் தோல்வியைத் தழுவியுள்ளது, திமுகவின் தலைமைப் பீடத்தையே நிலைகுலையச் செய்துள்ளது. ஒரு ஆளுங்கட்சியின் தலைவரும், முக்கிய நிர்வாகியும் ஒரே தேர்தலில் வீழ்ந்திருப்பது தமிழகத் தேர்தல் வரலாற்றில் இதுவே முதல்முறையாகும்.
திமுக ஆட்சிக்கு எதிரான மக்களின் அதிருப்தி மற்றும் விஜய்யின் தவெக மீதான ஆர்வம் ஆகியவையே இத்தகைய எதிர்பாராத முடிவுகளுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, ஆளுங்கட்சியின் பலமான அடித்தளமாக இருந்த வட மாவட்டங்களில் தவெக வேட்பாளர்கள் பல இடங்களில் வெற்றி பெற்றிருப்பது திமுகவின் செல்வாக்கு சரிந்துள்ளதைக் காட்டுகிறது. இன்று மாலைக்குள் முழுமையான முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், திமுக தனது வரலாற்றிலேயே மிக மோசமான அரசியல் நெருக்கடியைச் சந்தித்து வருவது உறுதியாகியுள்ளது.