அமெரிக்காவுக்குப் பலத்த அடி.. 2 பில்லியன் டாலர் இழப்பு - ராணுவத் தளவாடங்கள் சேதம்?!
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், கடந்த சில நாட்களில் அமெரிக்கா சுமார் 1.9 பில்லியன் டாலர் (சுமார் 2 பில்லியன் டாலர்) மதிப்பிலான ராணுவத் தளவாடங்களை இழந்துள்ளதாக துருக்கியின் 'அனடோலு' செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த சனிக்கிழமை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய 'ஆபரேஷன் எபிக் ஃபியூரி' தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களில் இந்த இழப்புகள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
துருக்கி செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள பட்டியலின்படி, அமெரிக்காவின் முக்கியமான பாதுகாப்பு அமைப்புகள் இலக்கு வைக்கப்பட்டுள்ளன. கத்தாரில் உள்ள அல்-உடைத் விமான தளத்தில் அமைக்கப்பட்டிருந்த இந்த அதிநவீன முன்கூட்டியே எச்சரிக்கும் ரேடார் அமைப்பு ஈரான் தாக்குதலில் சேதமடைந்துள்ளது. இதன் மதிப்பு மட்டும் சுமார் 1.1 பில்லியன் டாலர். ஐக்கிய அரபு அமீரகத்தில் நிலைநிறுத்தப்பட்டிருந்த த்ஹாட் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பின் ரேடார் பாகங்கள் தாக்கப்பட்டதில் சுமார் 500 மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது. குவைத்தில் நடந்த மோதல்களில் மூன்று F-15E ரக போர் விமானங்கள் வீழ்த்தப்பட்டதில் சுமார் 282 மில்லியன் டாலர் சேதம் ஏற்பட்டுள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. பொருளாதார இழப்புகள் ஒருபுறம் இருக்க, இந்த மோதலில் அமெரிக்க வீரர்களின் உயிரிழப்புகளும் உறுதி செய்யப்பட்டுள்ளன:
குவைத்தில் உள்ள போர்ட் ஷுவைபா பகுதியில் ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதலில் இதுவரை 6 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்துள்ளதாக பென்டகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக சவுதி அரேபியா மற்றும் குவைத்தில் உள்ள தனது தூதரகங்களை அமெரிக்கா தற்காலிகமாக மூடியுள்ளது. கனடா பிரதமர் மார்க் கார்னி உள்ளிட்ட உலகத் தலைவர்கள் இந்த மோதலை உடனடியாகக் குறைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
துருக்கியின் அனடோலு செய்தி நிறுவனம் இந்த 2 பில்லியன் டாலர் இழப்பை விரிவாகப் பட்டியலிட்டாலும், அமெரிக்காவின் பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் இந்தச் சேத மதிப்புகளை இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. இருப்பினும், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது ஈரான் கடுமையான பதிலடித் தாக்குதல்களை நடத்தி வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.