புதுக்கோட்டையில் கோர விபத்து - ஜாதகம் பார்க்கச் சென்றபோது கார், பேருந்து நேருக்கு நேர் மோதி ஒரே குடும்பத்தில் 2 பேர் பலி!

 

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே நிகழ்ந்த கோர சாலை விபத்தில், ஜாதகம் பார்க்கச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள மறவாமதுரை விலக்கு பகுதியில், தனியார் பேருந்தும் காரும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிப் பயங்கர விபத்துக்குள்ளாகின.

காரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பயணம் செய்துள்ளனர். அவர்கள் குடும்பத்தினரின் எதிர்காலம் மற்றும் சுபகாரியங்கள் குறித்து ஜாதகம் பார்ப்பதற்காகச் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நேரிட்டுள்ளது.

இந்த விபத்தில் காரில் பயணித்தவர்களில் இருவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த மற்ற இருவர் மீட்கப்பட்டுச் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

விபத்து குறித்துத் தகவலறிந்த காவல்துறையினர் உடனடியாக விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும், இந்த விபத்திற்குக் காரணமான தனியார் பேருந்தின் ஓட்டுநரைக் கைது செய்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.