ரூ.15 கோடி வருமானத்தை மறைத்ததாக வழக்கு... விஜய் மேல்முறையீடு!

 

வருமான வரித் துறை விதித்த ரூ.1.5 கோடி அபராத உத்தரவை எதிர்த்து, தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் சென்னை உயர் நீதிமன்ற அமர்வில் மேல்முறையீடு செய்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் விஜய் தாக்கல் செய்த வருமான வரி கணக்குகளை ஆய்வு செய்த வருமான வரித் துறை, அவர் சுமார் ரூ.15 கோடி வருமானத்தை மறைத்துள்ளதாகக் குறிப்பிட்டது. இதற்காக அவருக்கு ரூ.1.5 கோடி அபராதம் விதித்துத் துறை ரீதியான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த அபராதத்தை எதிர்த்து ஏற்கனவே தனி நீதிபதி முன்பு விஜய் வழக்கு தொடர்ந்திருந்தார். அப்போது அவர் தரப்பில் முன்வைக்கப்பட்ட முக்கிய வாதங்கள்:அபராத உத்தரவானது சட்டப்படி விதிக்கப்பட வேண்டிய கால அவகாசத்தைக் கடந்தே பிறப்பிக்கப்பட்டது. எனவே, இது செல்லத்தக்கதல்ல.

வருமான வரி கணக்குகளில் எவ்வித மறைப்பும் இல்லை, அனைத்தும் முறைப்படி தாக்கல் செய்யப்பட்டுள்ளன. முன்னதாக இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, வருமான வரித் துறை உரிய கால அவகாசத்திற்குள் தான் உத்தரவைப் பிறப்பித்துள்ளது எனக் கூறி விஜய்யின் மனுவைத் தள்ளுபடி செய்தார். இந்தத் தீர்ப்பை எதிர்த்து, தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் விஜய் மேல்முறையீடு செய்துள்ளார். தேர்தல் பணிகளில் விஜய் தீவிரமாக ஈடுபட்டு வரும் சூழலில், இந்தச் சட்டப் போராட்டம் அரசியல் வட்டாரத்திலும், அவரது ரசிகர்கள் மத்தியிலும் உற்று நோக்கப்படுகிறது.