திருப்பூரில் சீமான் மீது வழக்குப் பதிவு... 8 தொகுதி நாதக வேட்பாளர்கள் மீதும் நடவடிக்கை!

 

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் மாநிலம் முழுவதும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், திருப்பூர் யூனியன் மில் ரோட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற சீமான், தேர்தல் ஆணையம் விதித்த காலக்கெடுவைத் தாண்டிப் பேசியதாகப் புகார் எழுந்துள்ளது.

தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி, பொதுக்கூட்டங்கள் மற்றும் வாகனப் பிரசாரங்கள் இரவு 10 மணியுடன் நிறைவு பெற வேண்டும். ஆனால், திருப்பூர் பொதுக்கூட்டத்தில் சீமான் மற்றும் வேட்பாளர்கள் இரவு 10 மணிக்கு மேலும் தொடர்ந்து பொதுக்கூட்டத்தில் பேசி, தேர்தல் விதிமுறைகளை மீறியதாகத் தேர்தல் பறக்கும் படையினர் கண்டறிந்தனர். இது குறித்துத் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் முறைப்படி புகார் அளித்தனர்.

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையிலான போலீசார், சீமான் உட்பட நாம் தமிழர் கட்சியின் தினேஷ் (திருப்பூர் தெற்கு), அபிநயா (திருப்பூர் வடக்கு), கார்மேகன் (காங்கயம்), தமிழினியன் (பல்லடம்), ராம்குமார் (உடுமலை), திவ்யா (தாராபுரம்), ராதாமணி (மடத்துக்குளம்), மேனகா (அவினாசி) ஆகிய 8 வேட்பாளர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நேரத்தில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் அனைத்து வேட்பாளர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது நாம் தமிழர் கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "மக்களின் ஆதரவு அதிகரிப்பதைக் கண்டு அஞ்சி, ஆளுங்கட்சியின் தூண்டுதலால் இத்தகைய வழக்குகள் போடப்படுகின்றன" என அக்கட்சியின் நிர்வாகிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.