சிபிஐ விசாரணையா? அமித்ஷாவுடன் ஆலோசனையா?" - இன்று டெல்லி புறப்படுகிறார் விஜய் - தேர்தலுக்கு முன்பே அரங்கேறும் 'கிளைமாக்ஸ்'

 

தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி மின்னல் வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில், தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் இன்று டெல்லி செல்வது ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று மதியம் சென்னை விமான நிலையத்திலிருந்து தனி விமானம் மூலம் டெல்லிக்குப் புறப்படுகிறார். அதிகாரப்பூர்வமாக 'சிபிஐ விசாரணை' எனக் கூறப்பட்டாலும், இந்தப் பயணத்தின் பின்னணியில் இந்தியாவே உற்றுநோக்கும் ஒரு பெரும் அரசியல் வியூகம் இருப்பதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.

கடந்த 2025-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கரூரில் நடைபெற்ற தவெக மாநாட்டு நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. ஏற்கனவே இருமுறை நேரில் ஆஜராகி விளக்கம் அளித்த விஜய்க்கு, தற்போது மார்ச் 15 (நாளை) காலை டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதற்காக இன்று இரவு டெல்லியில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர விடுதியில் தங்கும் விஜய், நாளை காலை விசாரணையில் பங்கேற்கிறார். விஜய்யின் இந்த டெல்லி பயணம் வெறும் விசாரணைக்காக மட்டும் தானா என்ற சந்தேகம் அரசியல் விமர்சகர்களிடையே எழுந்துள்ளது.

தமிழகத்தில் திமுக - அதிமுக ஆகிய இரண்டு துருவ அரசியலை உடைக்க, விஜய்யை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இணைக்க பாஜக மேலிடம் விரும்புவதாகக் கூறப்படுகிறது. இதற்காகவே உள்துறை அமைச்சர் அமித்ஷா தரப்பிலிருந்து விஜய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஆந்திரத் துணை முதல்வர் பவன் கல்யாண் ஏற்கனவே விஜய்யுடன் இது குறித்துப் பேசியுள்ள நிலையில், டெல்லியில் இதற்கான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடக்க வாய்ப்புள்ளதாகப் பரபரப்பு கிளம்பியுள்ளது.

விஜய் டெல்லி செல்லும் அதே வேளையில், தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் நேற்று இரவு கட்சியின் மாவட்டச் செயலாளர்களுடன் 'ஆன்லைன்' மூலம் அவசர ஆலோசனையை நடத்தியுள்ளார். "நமது கொள்கை எதிரி பாஜக என்று முதலில் அறிவித்த நிலையில், இப்போது அவர்களுடன் கூட்டணி வைத்தால் மக்களின் பதில் என்னவாக இருக்கும்?" என்பது குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இருப்பினும், "திமுக என்ற மாபெரும் சக்தியை எதிர்க்கக் கூட்டணி பலம் அவசியம்" எனப் பல மாவட்டச் செயலாளர்கள் பச்சைக்கொடி காட்டியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.