திருமணமான மறுநாளே குறைபிரசவத்தில் குழந்தை... நெல்லையில் பரபரப்பு!

 

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அருகே திருமணமான மறுநாளே இளம்பெண் ஒருவர் குறைபிரசவத்தில் குழந்தை பெற்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஏழு மாத கர்ப்பத்தை மறைத்து திருமணம் செய்து வைத்ததாகப் புதுமாப்பிள்ளை அளித்த புகாரின் பேரில், புதுப்பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாளையங்கோட்டை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த இளைஞருக்கும், தாழையூத்து அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும் கடந்த நவம்பர் 15-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. அன்று இரவே புதுப்பெண் கணவரின் வீட்டிற்குச் சென்றுள்ளார். முதலிரவு முடிந்த நிலையில், மறுநாள் காலையில் புதுப்பெண்ணுக்குக் கடுமையான வயிற்றுவலியும் ரத்தப்போக்கும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் உடனடியாகச் சிகிச்சைக்காகத் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதற்கிடையில், புதுமாப்பிள்ளையின் வீட்டு வாசலில் ஏழு மாதக் குறைபிரசவத்தில் பிறந்த குழந்தை இறந்து கிடந்ததாகத் தகவல் வெளியானது. இது குறித்து தகவலறிந்து விரைந்து வந்த பாளையங்கோட்டை தாலுகா போலீசார், குழந்தையின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகத் திருநெல்வேலி ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக புதுமாப்பிள்ளை பாளையங்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார். தான் திருமணம் செய்த இளம்பெண் ஏழு மாதக் கர்ப்பமாக இருந்ததை மறைத்துத் திருமணம் செய்து வைத்துள்ளதாகவும், அவர் குறைபிரசவத்தில் குழந்தை பெற்றுள்ளதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்புகாரில் தெரிவித்துள்ளார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் புதுப்பெண் மீது நம்பிக்கை மோசடி மற்றும் கருச்சிதைவு ஏற்படுத்துதல் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், சம்பவம் தொடர்பாகத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.