"8-ஆம் வகுப்பு மாணவன் போதையில் கலாட்டா... இதுதான் திமுக சாதனையா?" - அன்புமணி
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே 8-ஆம் வகுப்பு மாணவர் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழகத்தில் மது கலாச்சாரத்தைப் பெருகவிட்டதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும் எனப் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சாடியுள்ளார்.
தஞ்சை கதிராமங்கலம் பகுதியில் தனியார் பள்ளி மாணவர் ஒருவர் தள்ளாடும் நிலையில் மதுபோதையில் பேசும் காணொலி இணையத்தில் பரவி வருவது குறித்து அன்புமணி ராமதாஸ் தனது அறிக்கையில் கவலை தெரிவித்துள்ளார்.
"திருக்குறள் கற்க வேண்டிய வயதில் மாணவர்கள் கள்ளுண்ணும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. மாணவர்களின் எதிர்காலத்தை மதுவைத் திணித்துச் சீரழித்ததுதான் திமுக அரசின் சாதனையா?" என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசு பள்ளிகளின் கட்டமைப்பு மற்றும் மதுக்கடைகளின் செயல்பாடுகளை ஒப்பிட்டு அவர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள், "அரசு பள்ளிகளில் பாடம் நடத்த ஆசிரியர்கள் இல்லை. 5 வகுப்புகள் கொண்ட பள்ளியில் கூட வெறும் 1 அல்லது 2 ஆசிரியர்களே உள்ளனர். ஆனால், மது விற்பனையை அதிகரிக்கச் சிறிய டாஸ்மாக் கடைகளில் கூட 5 பணியாளர்களைத் திமுக அரசு நியமித்துள்ளது."
ஒரு மாணவர் தனது வீட்டிலிருந்து பள்ளிக்குச் செல்வதற்குள் இரண்டு மதுக்கடைகளைக் கடந்து செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. தாராளமாக மது கிடைப்பதே மாணவர்கள் அதற்கு அடிமையாகக் காரணம் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பள்ளி மாணவருக்கு மது வாங்கித் தந்ததாகக் கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் அன்புமணி சில கேள்விகளை எழுப்பியுள்ளார்.
"தமிழக அரசின் விதிப்படி 21 வயதிற்குட்பட்டவர்களுக்கு மது விற்கக்கூடாது. ஆனால், கைது செய்யப்பட்ட கல்லூரி மாணவருக்கே 21 வயது ஆகவில்லை எனும் போது, அவருக்கு மது கிடைத்தது எப்படி? மது விற்பனை செய்த பணியாளர் முதல் இதைக் கண்காணிக்கத் தவறிய முதலமைச்சர் வரை அனைவரும் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும்."
திமுகவின் தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கு அல்லது போதைப்பொருள் ஒழிப்பு குறித்து ஒரு வார்த்தை கூட இல்லை என்று குறிப்பிட்ட அன்புமணி, மாணவர்களைப் போதைக்கு அடிமையாக்குவதுதான் திமுகவின் 'சூப்பர் ஸ்டார்' தேர்தல் அறிக்கையா? என வினவியுள்ளார். வரவிருக்கும் தேர்தலில் மக்கள் திமுகவிற்குப் படுதோல்வியைப் பரிசாக அளிப்பார்கள் என்றும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.