கனிமவளம் கடத்தல் - லஞ்சம் பெற்றதாகச் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மீது எழுந்துள்ள புகார்!
கன்னியாகுமரியிலிருந்து கேரளாவுக்குக் கனிம வளங்கள் சட்டவிரோதமாகக் கடத்தப்படுவதைத் தடுக்கத் தமிழக அரசு தீவிர நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில், சோதனைச் சாவடியில் பணியில் இருந்த காவலரே லஞ்சம் பெற்றுக்கொண்டு லாரிகளை அனுமதித்ததாகப் புகார் எழுந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுவதைத் தடுக்கச் சோதனைச் சாவடிகளில் காவல்துறை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், போலீசார் லஞ்சம் பெற்றுக்கொண்டு லாரிகளைக் கடத்த அனுமதிக்கின்றனர் என்ற குற்றச்சாட்டுகள் நிலவுகின்றன.
இந்நிலையில், மத்தம்பாலை சோதனைச் சாவடியில் மார்த்தாண்டம் காவல் நிலையத்தைச் சேர்ந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர், கனிமவளம் ஏற்றி வந்த லாரி ஓட்டுநரிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு அவற்றை எந்தவிதத் தடையுமின்றி கேரளாவுக்குச் செல்ல அனுமதித்துள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.