இங்கிலாந்தில் 100 ஆண்டு பழமையான வீட்டைப் புதுப்பித்த தம்பதி... படிக்கட்டு அடியில் கண்டெடுக்கப்பட்ட லட்சக்கணக்கில் பழைய பணக்கட்டுகள்!

 

இங்கிலாந்தின் ஷெபீல்ட் நகரில் 100 ஆண்டுகள் பழமையான வீட்டைப் புதுப்பிக்கும் போது, படிக்கட்டுகளுக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பழங்காலப் பணக்கட்டுகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

வீடு புதுப்பித்தல் பணி: ஷெபீல்ட் நகரைச் சேர்ந்த இளம் தம்பதியினர், 1900-ஆம் ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட தங்களுடைய 100 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பாரம்பரிய பழமையான வீட்டைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். வீட்டின் அடித்தளத்தில் உள்ள படிக்கட்டுகளுக்கு அடியில் அமைந்திருந்த பழமையான சுவரை இடித்துச் சுத்தம் செய்தபோது, அங்குத் துருப்பிடித்த நிலையில் ஒரு பழைய இரும்பு பெயிண்ட் டப்பா கிடந்துள்ளது.

அந்த இரும்பு டப்பாவைத் திறந்து பார்த்தபோது, அதற்குள் பேப்பரால் பத்திரமாகச் சுற்றப்பட்ட பழைய இங்கிலாந்து பவுண்ட் நோட்டுகள் கட்டுக்கட்டாக அடுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இந்த பணத்தின் மதிப்பு இந்திய ரூபாயில் சுமார் ₹1 லட்சத்திற்கும் மேல் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. வீடு 100 ஆண்டுகள் பழமையானதாக இருந்தாலும், இந்த நோட்டுகள் 1970-ஆம் ஆண்டு காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்ட பழைய பவுண்டுகள் என்பது கண்டறியப்பட்டது.

பயன்பாடற்று இருந்த அந்தப் பழைய நோட்டுகளைப் பத்திரமாக உலர வைத்து, வங்கியில் கொடுத்து மாற்றிக்கொண்டதாகவும், அந்தப் பணத்தைக் கொண்டு தங்களுடைய வீட்டுப் பயன்பாட்டுக் கட்டணங்களைச் செலுத்தியதாகவும் அந்தத் தம்பதியினர் சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையவாசிகளிடையே வைரலாகி வருகிறது.