undefined

அங்கன்வாடி மையத்தில் அடம் பிடித்த மகள்.. ஆசையாய் உணவு ஊட்டி அழைத்து சென்ற கலெக்டர்..!!

 

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரின் மகள் அங்கன்வாடி மையத்தில் படிக்கும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக இருப்பவர் கே.எம்.சரயு., இவரது மகள் மிலி (2 1/2 வயது). இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் இன்று கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினத்தில் தமிழக அரசு மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு பணிகளை ஆய்வு செய்தார். முதலில் காவேரிப்பட்டினம் அரசு சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர், பின்னர் அதற்கு அருகில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்திற்கு சென்று ஆய்வு செய்தார்.

அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு முறையாக உணவு வழங்கப்படுகிறதா, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வருகை பதிவேடு ஆகியவற்றை ஆய்வு செய்த ஆட்சியர், அங்கு தன்னுடைய மகள் படிப்பதை பார்த்து ரசித்தார். பின்னர் அங்கன்வாடி மையத்தில் வழங்கப்படும் உணவை தனது மகள் மிலிக்கு ஊட்டிய ஆட்சியர் ஆய்வுப் பணிகளை முடித்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டார்.

அப்போது ஆட்சியரின் மகள் மிலி தன்னையும் அழைத்துச் செல்லுமாறு மாவட்ட ஆட்சியரிடம் அடம் பிடித்து அழுதார். பின்னர் உணவு அருந்திய பிறகு மாவட்ட ஆட்சியர் தன்னுடைய மகளை அங்கன்வாடி மையத்தில் இருந்து அழைத்துக் கொண்டு புறப்பட்டார். பின்னர் தன்னுடைய மகளுடன் ஆய்வு பணிகளை தொடர்ந்தார்.