நடைப்பயிற்சியில் வாக்குவாதம்... கன்னத்தில் அறைந்த கணவனைக் கல்லால் அடித்துக் கொன்ற மனைவி!

 

குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தில், மாலை நேர நடைப்பயிற்சியின் போது கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட சாதாரணத் தகராறு கொலையில் முடிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு என்பதை நிரூபிக்கும் வகையில் இந்தத் துயரம் நிகழ்ந்துள்ளது.

நர்மதா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு தம்பதி, வழக்கம்போல நேற்று மாலை அப்பகுதியில் உள்ள சாலையில் நடைப்பயிற்சி (Walking) மேற்கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்குள் ஏதோ ஒரு விஷயம் தொடர்பாகப் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. அந்தப் பேச்சு மெல்ல மெல்ல முற்றி, இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதமாக மாறியது.

வாக்குவாதம் முற்றிய நிலையில், பொறுமையிழந்த கணவர் ஆத்திரத்தில் தனது மனைவியின் கன்னத்தில் பலமாக அறைந்துள்ளார். பொது இடத்தில் வைத்துத் தன்னை கணவர் தாக்கியதால் அந்தப் பெண் கடும் கோபமும், ஆவேசமும் அடைந்தார்.

கணவர் அறைந்த ஆத்திரத்தில் நிலைகுலைந்த மனைவி, சாலையில் ஓரமாகக் கிடந்த ஒரு பெரிய கல்லைத் தூக்கி, சற்றும் எதிர்பாராத விதமாகக் கணவரின் தலையில் பலமாகத் தாக்கினார். இதில் கணவரின் மண்டை உடைந்து, ரத்த வெள்ளத்தில் அவர் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்தார்.

தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், அவர் உதவிக்குக் கூட யாரையும் அழைக்க முடியாமல் அந்த இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ரத்தக் கறையுடன் இருந்த மனைவியைக் கைது செய்தனர். உயிரிழந்த கணவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சிறு கோபத்தைக் கட்டுப்படுத்தத் தவறியதால், ஒரு குடும்பமே சிதைந்து போன இந்தச் சம்பவம் நர்மதா மாவட்ட மக்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.