போதையில் நடுரோட்டில் மல்லுக்கட்டிய ஜோடி - இளம்பெண் செய்த அதிரடி காரியம்!
ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள இஃப்கோ சௌக் பகுதியில், மதுக்கடை ஒன்றின் அருகே அரங்கேறிய இந்த ரகளையானது தற்போது இணையதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. மது போதையில் இருந்த ஒரு வாலிபருக்கும், ஒரு இளம்பெண்ணுக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
போதை தலைக்கேறிய நிலையில் இருந்த அந்த நபர், ஆத்திரத்தில் அந்தப் பெண்ணை ஓங்கி அறைந்துள்ளார். இதனால் ஆவேசமடைந்த அந்தப் பெண், சற்றும் யோசிக்காமல் அந்த நபரைத் திருப்பித் தாக்கியதுடன், நடுரோட்டிலேயே அவரது சட்டையைப் பிய்த்துக் கிழித்து எறிந்துள்ளார்.
பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள சாலையில், ஒருவருக்கொருவர் கூச்சலிட்டுக்கொண்டு கட்டிப்புரண்டு சண்டையிட்ட இந்தச் சம்பவம் அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
பலரும் இதை வேடிக்கை பார்த்தபடி தங்களது செல்போன்களில் வீடியோ எடுத்தனர். இந்த மோதல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகத் தொடங்கியதையடுத்து, இது "நவீன கால கலாச்சாரச் சீரழிவு" என இணையவாசிகள் மத்தியில் கடும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை பாதிக்கப்பட்ட தரப்பிலிருந்தோ அல்லது அந்தப் பெண்ணிடமிருந்தோ எந்தவொரு அதிகாரப்பூர்வ புகாரும் காவல் நிலையத்தில் அளிக்கப்படவில்லை. இருப்பினும், பொது இடத்தில் அமைதிக்குக் குந்தகம் விளைவித்தது மற்றும் ஆபாசமாக நடந்துகொண்டது ஆகிய காரணங்களுக்காக, வைரல் வீடியோவை ஆதாரமாகக் கொண்டு குருகிராம் போலீசார் தாமாக முன்வந்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். வீடியோவில் உள்ள நபர்கள் யார்? அவர்கள் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள்? என்பது குறித்து போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
"மது அருந்துவது தனிமனித விருப்பம் என்றாலும், பொது இடங்களில் இது போன்ற அநாகரீகச் செயல்களில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது" என்று சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.